இந்து மத மக்கள் தற்போது எழுச்சி பெற்றுவிட்டார்கள் என்றும், மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் முதல்வர் ஸ்டாலின், இந்து மத பண்டிகைக்கு வாழ்த்து கூறி ஒரு அறிக்கை வெளியிடுவதில் என்ன கெட்டுப்போக போகிறது என்றும், இந்து மதத்தினர் திமுகவுக்கு எதிராகத் திரும்பினால் பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும் அரசியல் ஆய்வாளர் லட்சுமணன் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்துக்களின் உணர்வுகளை திமுகவும், முதல்வரும் மதிக்க முதலில் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். முருகன் மாநாட்டில் கூடிய கூட்டமும், சென்னிமலை முருகன் கோயில் திருவிழாவில் கூடிய கூட்டமும், இனியாவது திமுக தன்னுடைய பாதையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு மறைமுக பாடத்தை சொல்லித் தருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
தீபாவளி உட்பட இந்து பண்டிகைகளுக்கு முதல்வர் வாழ்த்து சொல்ல மறுக்கிறார் என பாஜக தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதை இந்து மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள் என்றும், இந்து மதத்திற்கு எதிராகவே திமுக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்பதை தற்போது இந்து மக்கள் புரிந்துகொண்டார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான், அரசியல் ஆய்வாளர் எஸ்.பி. லட்சுமணன், “தீபாவளிக்கு ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு போக வேண்டியதுதானே, அதில் என்ன உங்களுக்குக் கஷ்டம்? ‘இல்லை, நாங்கள் கடவுள் மறுப்புக் கொள்கையை பின்பற்றுபவர்கள். இந்த மாதிரி கற்பனை கதைகளை நம்பி, அதனால் கொண்டாடப்படும் பண்டிகைக்கு நாங்கள் வாழ்த்து சொல்ல மாட்டோம்’ என்று வியாக்கியானம் பேசினால், மதவாதத்தை நீங்கள் மறைமுகமாக தொடங்கி வைக்கிறீர்கள்,” என்று திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மற்ற மதங்களிலும் மூடநம்பிக்கைகள் இருக்கின்றன என்றும், ஆனால் மற்ற மதத்தின் பண்டிகைகளுக்கு தவறாமல் வாழ்த்து சொல்லும் முதல்வர், இந்து மத பண்டிகைக்கு மட்டும், அதுவும் தமிழக மக்கள் கொண்டாடும் இந்து பண்டிகைகளுக்கு மட்டுமே வாழ்த்து சொல்லாமல் தவிர்க்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகை என்பது இந்து மக்கள் கொண்டாடும் பண்டிகைதான், ஆனால் அதற்கு அவர் வாழ்த்து சொல்கிறார். ஆனால், தமிழக மக்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லாமல் இருப்பது இந்து மதத்தை தொடர்ந்து அவமதிப்பதற்கு சமம் என்றும் திமுகவை பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் இருந்தால் தான், சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு முழுமையாக ஆதரவு தெரிவிப்பார்கள் என்ற கூட்டல் கழித்தல் கணக்கு இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்கள் இல்லாத நாட்களில், இந்து மதத்தை பழித்தும், அவமதித்தும் பேசியது பெரிய அளவில் பரவவில்லை. ஆனால், தற்போது இந்து மதத்தை அவமதித்து ஒரு பேச்சு பேசினால் கூட, அது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, பொன்முடி அவர்கள் இந்து மதத்தை அவமதித்து, பட்டை, நாமம் குறித்து அவதூறாக பேசியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பதும், அவருடைய கட்சி பதவியை பறிக்கும் அளவுக்கு அந்த விவகாரம் வீரியமானது என்பதையும் பார்த்தோம்.
எனவே, இந்து மக்கள் முன்பு மாதிரி அமைதியாக இருக்க மாட்டார்கள் என்றும், இந்து மக்களின் வாக்குகள் தேவை என்றால், கண்டிப்பாக திமுக இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லி, இந்து மக்களின் மனதை குளிர்விக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இனியாவது சுதாரித்து, திமுகவும் அதன் தலைவர்களும் வரும் நாட்களில் இந்து மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்வார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.