பழனி மலைக்கோவிலுக்குப் போனால் ஆண்டிக் கோலமா, ராஜஅலங்காரமா எதை வழிபடுவதுன்னு பலருக்கும் சந்தேகம் வரும். அதன் விவரம் பார்க்கலாமா…
பட்டதெல்லாம் போதுமா? இல்லை மொட்டை போட்டு கொண்ட நிலை வேண்டுமா? என்பதனை உணர்த்தும் திருக்கோலமே பழநி முருகனின் ஆண்டிக் கோலம்!
நன்றாய் வாழவேண்டுமா? மனதை அடக்கு. சித்தத்தை தெளிவாக்கு. அறிவை பலப்படுத்து. பலப்படுத்திய அறிவை நன்முறையில் செயல்படுத்து.செயல்படுத்தி வாழும்போது, உனது வாழ்வு ஒரு அரசனின் வாழ்விற்கு ஒப்பாகும்
என்பதை உணர்த்துவதே ராஜ அலங்காரம்.
பிள்ளைப்பருவத்தில் விளையாட்டுப் பிள்ளையாய் காலமுழுவதும் விளையாடி கழிப்பதை போன்று வாழ்நாள் முழுவதும் விளையாட்டுப் பிள்ளையாய் காலத்தைக் கழிக்காதே என்பதனை உணர்த்துவதே பால முருக அலங்காரம்.
பழனி முருகன் கோவிலில் சாதாரண நிலையில் இருக்கும் ஆண்டி வடிவத்தை பார்ப்பதைவிட ராஜ அலங்கார வடிவத்தையே நிறைய பேர் தரிசிக்கின்றார்கள். இதுபோன்று ராஜ அலங்கார வடிவத்தை தேர்ந்தெடுத்துப் தரிசிப்பது என்பது சரியானதா?
பொதுவாக சாதாரண மனிதர்களாகிய நாம் அனைவரும் பழநி முருகனை நம்முடைய பல சுயதேவைகளைப் பூர்த்தி செய்யவும், தீராத பல பிரச்சனை களையும், நோய்களையும் தீர்த்து வைக்கவும் வேண்டுகிறோம்.
ஆனால் பெரிய ஞானிகள்,முற்றும் துறந்தவர்கள், குடும்பத்தில் பல நிலைகளைக் கடந்தவர்கள் இவர்களெல்லாம் அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் பழநி முருகனை பார்க்கும்போது அவர்களுக்குள் ஒரு மெய்ஞானம் உண்டாகும் என்பதற்காக பழநி முருகனின் முற்றும் துறந்த நிலையான ஆண்டி கோலத்தைக் காண்பதற்காகத்தான் துடிப்பார்கள்.
முருகனின் ஆண்டிக் கோலத்தினை சாதாரண மனிதர்களாகிய நாம் எப்போது தரிசனம் செய்ய வேண்டும்? நமக்கு வழக்குகளெல்லாம் நடக்கிறது, தீராத நோய்களெல்லாம் இருக்கிறது போன்ற பிரச்சனைகளுக்கு அலங்காரம் இல்லாத முருகனை வணங்குதல் நன்று.
20 வருடமா வாதாடிக் கொண்டிருக்கிறேன். தீர்ப்பு தள்ளி தள்ளிப் போகிறது என்றால் அதற்கு அலங்காரம் இல்லாத ஆண்டிக் கோல முருகன் வழிகாட்டுவார். தீராத நோய், மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள், அவ்வளவுதான் என்ற நிலையில் அதற்கும் நீங்கள் முருகனின் ஆண்டி கோலத்தை தரிசிக்கலாம்.
மன குழப்பம் அடைந்து இருக்கிறார்களே, அவர்களையும் இந்த ஆண்டிக் கோல முருகனை வழிபடச் சொல்லலாம். இதனால் அவர்களுக்கு மன நிலையில் மாற்றங்கள் ஏற்படுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.