முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி மலை முருகன் கோவிலின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்று பார்ப்போமா…
பழனிமலையின் வடபுறத்தில் பிரம்ம தீர்த்தம் இருக்கிறது. இந்த தீர்த்தக்கரையில் சிவன்,அம்பிகையுடன் ரிஷப வாகனத்தின் மீதும், திருமால் கருடன் மீதும், பிரம்மா அன்னபட்சியின் மீதும் காட்சி தருகின்றனர். இங்கு மூவரும் மேற்கு நோக்கி யிருப்பது சிறப்பம்சம்
இந்த பிரம்ம தீர்த்தநீரை தெளித்துக் கொண்டு மும்மூர்த்திகளையும் வழிபட்டால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் பழநி மலைப்பாதையில் உள்ள வள்ளி சுனையில் முருகன், வள்ளி திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர். வில்வ மரத்தின் அடியில் வள்ளி தனியாகவும் காட்சி தருகிறாள்.
இந்தவள்ளி சுனையிலுள்ள வில்வமரத்தில் பெண்கள் திருமாங்கல்யக் கயிறு கட்டியும் வள்ளி சுனையில் உள்ள நாகருக்கு தீர்த்த அபிஷேகமும் செய்வது சிறப்பு..பழநியில் முருகப்பெருமானை 3 கோலங்களில் தரிசிக்கலாம்.
திருஆவினன்குடி தலத்திலிருந்து சுமார் 4 கி.மீ.,தூரத்திலுள்ள பெரியநாயகி கோயிலில் முருகன் மயில் வாகனம் இல்லாமல் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்திலும்,திருஆவினன்குடியில் மயில் மீது அமர்ந்து குழந்தை வேலாயுதர் வடிவிலும், மலைக்கோயிலில் கையில் தண்டத்துடன் ஞான தண்டாயுதபாணியாகவும் காட்சி தருகிறார்.
ஒரே தலத்தில் இவ்வாறு முருகனின் மூன்று கோலங்களையும் தரிசிப்பது மிக அபூர்வம். பொதுவாக சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்று, சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். ஆனால், ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பழநி மலைக்கோயிலில் அருளும் தண்டாயுதபாணிக்கு உச்சிக்காலத்திலும், ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதருக்கு சாயரட்சை பூஜையின்போதும் அன்னாபிஷேகம் செய்யப் படுகிறது.
இதற்கு அடுத்த இரண்டு நாட்களில் பூராடம்நட்சத்திரத்தில் பெரியநாயகி கோயிலிலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பெரியாவுடையார் கோயிலிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. பழநி மலையில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் இடும்பனுக்கு தனி சன்னதி இருக்கிறது.
இங்கு இடும்பன் தோளில் சக்திகிரி, சிவகிரி என்னும் 2 மலைகளை சுமந்து வந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது சன்னதி எதிரில் நந்தி வாகனமும், இடும்பன்,கடம்பன் பாதமும் இருக்கிறது. இந்த இடும்பனுக்கு தினமும் அதிகாலை 3 மணிக்கு அபிஷேகம் செய்து, பின்பு 5 மணிக்கு பூஜை செய்வர். அதன்பின்பே மலைக்கோயிலில் உள்ள முருகனுக்கு பூஜை நடக்கிறது.
காவடி தூக்கிச்செல்லும் பக்தர்கள் இடும்பன் சன்னதியில் பூஜை செய்து, பேட்டை துள்ளிய பின்பே மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இடும்பன் சன்னதியில் அவரது குரு அகத்தியர் உள்ளார். அருகில் இடும்பனும், கடம்பனும் நின்றிருக் கின்றனர்.
அகத்தியர் இங்கிருப்பதால், பக்தர்களுக்கு கமண்டலத்தில் நிரப்பப்பட்ட தீர்த்தம் தரப்படுகிறது. இதனை அகத்தியரே தருவதாக நம்பிக்கை. இந்த தீர்த்தம் பருகிட நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை உள்ளது. பழநியில் முருகன் சிவனின் அம்சமாக விளங்குவதால் மற்ற திருத்தலங்களைப்போல் அல்லாமல் இங்கு அதிகாலை முதல் இரவு பூஜை வரை பன்னீர் சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்து கொண்டேதான் இருக்கிறது.
இரவு பூஜை முடியும் வரை இங்கு சன்னதி சாற்றப்படுவதில்லை அபிஷேகம் செய்யப்படுகின்ற பன்னீர் சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகிய பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த சக்தி கொண்டவை
பழநி தண்டாயுத பாணி சுவாமியை மொட்டை ஆண்டி கோலத்தில் படங்களில் சித்தரித்திருந்தாலும் இவருக்கு நடைபெறும் அபிஷேக காலங்களில் இவர் சடாமுடியுடன் தான் விளங்குகிறார்.திருவண்ணாமலை கிரிவலம் எத்தனை சிறப்போ அத்தனை சிறப்புகளும் இந்த பழநி மலை கிரிவலத்திற்கும் உண்டு.குறிப்பாக அக்னிநட்சத்திர காலங்களில் இந்த பழநிமலையினை கிரிவலம் செய்தல் மிகச்சிறப்பு.