மூன்றாம் பிறை தரிசனம்… சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.
மூன்றாம் பிறை தரிசனம் வெறும் ‘சந்திர தரிசனம் அல்ல’. அந்த சிவபெருமானின் ஒரு பகுதியை நாம் தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறோம். இந்த சந்திர தரிசனம் கிட்டும் போதெல்லாம் ‘ஸ்ரீசந்திர மௌலீஸ்வராய நம!’ அல்லது ‘ஸ்ரீசந்திர மௌலீஸ்வரா போற்றி’ என்று இடைவிடாமல் ஜெபித்து வந்தால் மனம் அமைதி அடையும்.
அறிவு ஒளி பெற்று தெளிந்த மனநிலையை அடையலாம். தொடர்ந்து மூன்றாம் பிறை தரிசனம் கண்டு வந்தால் எந்த நிலையிலும் மன வியாதிகளே வராது. செல்வவளம் பெருகும், தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
ஒருமுறை விநாயகப்பெருமான், சிவனின் அதிகாரத்தையும், பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். பொறுப்பினை ஏற்றுக்கொண்ட பின் விநாயகர் அனைத்து உலகங்களையும் பார்வையிட சென்றார். எல்லா உலகத்தையும் பார்வையிட்ட விநாயகர் சந்திரனையும் பார்க்க சென்றார். சந்திரன் ஒரு முழுவெண்மதி என்பதால், விநாயகரின் திருவுருவை பார்த்து பரிகசித்தான்.
இதனால் கோபமுற்ற விநாயகப்பெருமான் உன் அழகு இன்று முதல் இருண்டு, உன்னை உலகத்தார் வணங்க மாட்டார்கள் என்று சாபமிட்டார். விநாயகரின் சாபத்தால் சந்திரனின் அழகு குன்றியது. பின் சந்திரன் பொலிவிழந்தான். இதனால் கவலை அடைந்த சந்திரன் மனம் வருந்தினான். பின் சிவனை நோக்கி கடும் தவம் இருந்து தன் பழைய அழகை பெற்றான்.