தமிழ்நாடு மின்சார வாரியத்தின் விநியோக நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் முக்கிய ஒருங்கிணைப்பு கூட்டம் அண்மையில் புதிய மின்துறை அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மின்சார வாரியத்தில் நிலவி வரும் பல்வேறு நிர்வாக நடைமுறைகள் மற்றும் டெண்டர் ஒதுக்கீடுகளில் உள்ள சிக்கல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் செயலாளர் ஹீராராஜன், மின்துறையில் கடந்த காலங்களில் நடைபெற்ற அப்பட்டமான ஊழல்கள் மற்றும் முறேகடுகளை அமைச்சரின் முன்னிலையிலேயே பகிரங்கமாக தெரிவித்தது ஒட்டுமொத்த மின்துறை வட்டாரத்திலும், அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த ஹீராராஜன், கடந்த ஆட்சி காலத்தில் மின்சார வாரியத்தில் அரங்கேறிய அத்தனை விஷயங்களும் அப்பட்டமான முறைகேடுகள் என்று குற்றம் சாட்டினார். “கடந்த ஆட்சியில் மின்துறையின் பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்முதல் பணிகளில் மிக மோசமான முறையில் முறைகேடுகள் செய்து, கோடிக்கணக்கில் பணத்தை அடித்து சுருட்டியிருக்கிறார்கள். ஒப்பந்ததாரர்களாகிய எங்களிடம் வாங்கப்படும் கமிஷன் தொகையை வைத்து கொண்டுதான் இங்கு பல்வேறு அடிப்படை வேலைகளையே அதிகாரிகள் செய்து முடித்திருக்கிறார்கள்” என்று அவர் தனது பேட்டியில் மிகவும் ஆவேசமாக தெரிவித்தார்.
மேலும், ஒப்பந்ததாரர்கள் எதிர்கொண்டு வரும் இந்த அநீதிகள் மற்றும் முந்தைய ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகள் குறித்த அனைத்து ஆதாரங்களையும், புகார்களையும் தற்போதைய புதிய மின்துறை அமைச்சரிடம் தங்களது சங்கம் சார்பாக நேரடியாகவே சமர்ப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ள சூழலில், ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தை சுரண்டிய முந்தைய அதிகார வர்க்கத்தின் மீதும், அதற்கு துணை நின்ற அரசியல் சக்திகள் மீதும் இந்த அரசு நிச்சயம் கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்ற தங்களது அசைக்க முடியாத நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
ஹீராராஜன் முன்வைத்துள்ள இந்த பகிரங்க குற்றச்சாட்டுகள் ஒருபுறம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், தற்போதைய மின்துறையில் சத்தமில்லாமல் பல பெரிய, பெரிய நிர்வாக மாற்றங்கள் நடந்து வருவதை இது காட்டுகிறது. புதிய அரசு பதவியேற்றது முதலே, மின்சார வாரியத்தில் நீண்ட காலமாகத் தேங்கிக் கிடந்த கோப்புகள் சரிபார்க்கப்பட்டு, தேவையற்ற நஷ்டங்களை ஏற்படுத்தும் கொள்முதல் ஒப்பந்தங்கள் அனைத்தும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. லஞ்ச ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் வெளிப்படையான டெண்டர் நடைமுறைகள் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய சிறப்பான முன்னெடுப்புகள் காரணமாக, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்போது நிர்வாக ரீதியாகவும், செயல்பாட்டு ரீதியாகவும் பல நல்ல மாற்றங்கள் சத்தமின்றி, ஆனால் மிகவும் தீவிரமாக அரங்கேறி வருகின்றன. ஒப்பந்ததாரர்கள் அமைச்சரை நேரில் சந்தித்து தங்களது குறைகளையும், கடந்த கால ஊழல்களையும் பயமின்றி பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு மின்துறையில் ஒரு வெளிப்படையான மற்றும் ஜனநாயக ரீதியான சூழல் புதிய அமைச்சரவையால் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தன்னிச்சையான ஆதிக்கத்தை குறைத்து, தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாகத் தண்டிக்கப்படுவார்கள் என்ற எச்சரிக்கையை புதிய மின்துறை அமைச்சகம் நிலைநாட்டியுள்ளது.
கடந்த ஐம்பது ஆண்டு கால திராவிட ஆட்சிகளில் மின்சார வாரியம் என்பது பெரும் நஷ்டத்திலும், ஊழல் புகார்களிலும் சிக்கி தவித்த ஒரு துறையாகவே பொதுமக்களால் பார்க்கப்பட்டது. ஆனால், முதலமைச்சர் விஜய்யின் வழிகாட்டுதலின்படி, கல்வி துறையை போலவே மின்துறையையும் ஒரு தூய்மையான, லாபம் ஈட்டக்கூடிய மக்கள் சேவை துறையாக மாற்ற புதிய அரசு எடுத்து வரும் உறுதியான நடவடிக்கைகள் தற்போது அடிமட்ட அளவில் நல்ல பலனைத் தர தொடங்கியுள்ளன. கடந்த கால முறைகேடுகளை வேரறுத்து, தமிழ்நாட்டை மின் உற்பத்தியில் ஒரு மிகச்சிறந்த முன்னோடி மாநிலமாக மாற்றும் நோக்கில் இந்த அரசு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
https://x.com/polimernews/status/2058919765717250419
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
