தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து விஜய் அரசியலில் அதிரடி காட்டுவார் என்றே பலரும் நினைத்து வருகின்றனர். சினிமா வேறு. அரசியல் வேறு. ஒரு சிலர் தான் அதில் ஜெயித்துள்ளனர். எம்ஜிஆர் சினிமாவில் மட்டுமல்ல. அதன்மூலம் மக்கள் மத்தியிலும் நல்ல பேரை வாங்கினார். அந்த வகையில் அவர் அரசியலைப் பற்றி தன் படங்களிலும் அவ்வப்போது பல அழுத்தமான வசனங்களை வைத்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உண்டாக்கினார்.
அதனால் அரசியலுக்கு வந்ததும் அழுத்தமாக முத்திரை பதித்தார். அதே போல விஜயகாந்தை கருப்பு எம்ஜிஆர் என்று சொன்னார்கள். எம்ஜிஆரைப் போல தன்னை நாடி வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவிகளைச் செய்தார். இவரும் சினிமாவைப் போல அரசியலிலும் தடம் பதித்தார். ஆனால் அவரது உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் அடுத்த லெவலுக்குச் செல்ல முடியவில்லை.
அந்த விஷயத்தில் விஜய் சினிமாவில் பீக்கில் இருக்கும்போதே அரசியலில் இறங்கியுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிரடியாகக் களம் இறங்குகிறார். அதற்கான நடவடிக்கைகளை இப்போதே எடுத்து வருகிறார். ஜனநாயகன் படம் விஜயின் திரையுலக வாழ்க்கையில் கடைசி படம் என்றும் அறிவித்துள்ளார். அதை முடித்த கையோடு முழுநேர அரசியல்வாதியாகிறார். இந்தப் படம் வரும் 2026 ஜனவரி 9ல் வெளியாக உள்ளது.
விஜயே தன்னை இன்னும் முழுநேர அரசியல்வாதியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அப்படி அவர் வெளிப்படுத்திக் கொண்டபிறகு தான் அவரு கட்சியில சேரணுமா வேணாமாங்கற எண்ணம் திரையுலகைச் சேர்ந்த பல கலைஞர்களுக்கும் ஏற்படும்னுதான் நினைக்கிறேன். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தைப் பொருத்தவரைக்கும் விஜயை அவர் ஆதரிப்பதாக இருந்தால் கூட வெளிப்படையாக ஆதரிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்கிறார் சித்ரா லட்சுமணன்.