கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாத காலகட்டத்தில் அந்தக் காட்சியை எல்லாம் எப்படி படமாக்கினார்கள் என்று ஆச்சரியமாக உள்ளது. பிரகலாதனின் கதைப்படி தன்னை எதிர்த்த பிரகலாதனின் தலையை யானையை வைத்து நசுக்கி இரண்யகசிபு கொல்ல வேண்டும். கதைப்படி யானை பிரகலாதனை மிதிக்காது. அப்படியே நின்று விடும். காட்சியின்படி அதற்கு நன்கு பழகிய யானை வேண்டும். பக்தபிரகலாதா என்ற இந்தப் படத்தில் பிரகலாதனாக சிறுவன் கேரக்டரில் ரோஜா ரமணி நடித்தான். அப்படிப்பட்ட பழகும் யானையை கேரளாவில் படக்குழு கண்டுபிடித்தது.
ஆனால் அதை சென்னைக்குக் கொண்டு வந்து படமாக்குவது சிரமம். அதனால் கேரளாவில் அந்தக் காட்சியை எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தது படக்குழு. இருந்தாலும் படப்பிடிப்பு நடக்கும்போது யாருக்குத்தான் பயமாக இருக்காது. அதுவும் பிரகலாதனாக நடித்த ரோஜா ரமணியின் பெற்றோருக்கு எவ்வளவு பயமாக இருக்கும்.
யானை காலைத் தூக்கி மிதிக்காமல் அப்படியே வைத்து இருந்தால் ஓகே. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தூக்கிய காலை அழுத்தி மிதித்து விட்டால் என்னாவது என்ற பயம் எல்லாருக்கும் இருந்தது. அதனால் ரோஜா ரமணியின் பெற்றோர் நாங்கள் தொலைவில் சென்று நின்று கொள்கிறோம். அந்தக் காட்சியைப் படமாக்கியதும் வருகிறோம் என்று சென்று விட்டனர்.
படப்பிடிப்புக் குழுவினருக்கே திக் திக் என்று தான் இருந்தது. அதைப் போல காட்சிப் படமானது. நல்லவேளை யானை தூக்கிய காலை அப்படியே நிறுத்தியது. படமும் சிறப்பாக வந்தது. அந்தக் காட்சி கனகச்சிதமாக வந்ததால் தான் அந்த சிறுவன் தப்பித்தான். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் இதுபோன்ற காட்சிகளை எளிமையாக எடுத்து விட முடிகிறது.