அதிமுக – பாஜக கூட்டணி, தலைமை மட்டத்தில் ஒரு ஒத்திசைவான கூட்டணியாக இருந்தாலும், தொண்டர்கள் மட்டத்தில் அது பொருந்தாத ஒன்றாகவே கருதப்பட்டது. தற்போது, நடுநிலை வாக்காளர்களும் இந்த கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முருகன் மாநாடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழுவதுமாக இந்துத்துவா சார்ந்ததாக இருந்ததாகவும், அதற்கு சிறிதும் எதிர்ப்பு தெரிவிக்காமல் அதிமுக தனது திராவிட கொள்கைகளில் இருந்து விலகி, ஒரு மினி பாஜகவாக மாறிவிட்டது என்றும் அரசியல் விமர்சகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்த அதிமுக, திராவிட கொள்கைகளில் உறுதியாக நின்ற நிலையில், தற்போது சிறுபான்மை வாக்குகளை இனி பெற முடியாது என்பது உறுதியானதால், பாஜகவுடன் கைகோர்த்து இந்துத்துவாவுக்கு மாறியிருப்பது நடுநிலை வாக்காளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் இந்தச் செயல்பாடுகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த அதிருப்தியை நடிகர் விஜய் அறுவடை செய்வதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிமுகவின் பெரும்பாலான வாக்குகள் விஜய்க்கு தான் செல்லும் என்றும், இதனால் விஜய்க்குத்தான் ஜாக்பாட் என்றும் கூறப்படுகிறது. திமுகவை பொருத்தவரை, திமுகவுக்கு எதிரான வாக்குகள் விஜய் தனியாக நின்றால் ஒரு பக்கமும், அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஒரு பக்கமும் செல்லும், அதனால் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்திருந்தது. ஆனால், தற்போது திமுகவுக்கு எதிரான வாக்குகள் அனைத்தும் விஜய் பக்கம் செல்வதாகவும், அதிமுக – பாஜக கூட்டணி தோல்வியை நோக்கி செல்வதாகவும் கூறப்படுவதால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது.
ஏற்கனவே விஜய், திமுகவுக்கு பெரும் சவாலாக இருப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிமுகவின் செயல்பாடுகள் விஜய்க்கு கூடுதலாக வாக்கு சதவீதத்தை அளிக்கும் என்று கருத்துக் கணிப்பாளர்கள் தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில், 2026 ஆம் ஆண்டு தேர்தலை பொறுத்தவரை, திமுகவா, தவெகவா? என்றுதான் போட்டி மாறிவிட்டதாகவும், கிட்டத்தட்ட அதிமுக – பாஜக கூட்டணி ஆட்டத்தில் இருந்து விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் இருக்கும் நிலையில், அதிமுக தனது பாஜக கொள்கையில் இருந்து விலகி மீண்டும் தனது திராவிட சித்தாந்த கொள்கையை கையில் எடுத்து மக்கள் மத்தியில் செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.