ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியாகி இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் ‘3 இடியட்ஸ்’. அமீர்கான், மாதவன் மற்றும் ஷர்மான் ஜோஷி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படம், கல்வி முறையில் நிலவும் அழுத்தங்களை நகைச்சுவை கலந்த பாணியில் பேசி மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படம் வெளியாகி 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இதன் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை நடிகர் அமீர்கான், வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அமர் உஜாலா ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், ‘3 இடியட்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கிவிட்டதை அமீர்கான், உறுதிப்படுத்தியுள்ளார். இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி தற்போது இதற்கான திரைக்கதையை எழுதி வருவதாகவும், அவர் சொல்லிய கதைக்களம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் அமீர்கான் தெரிவித்துள்ளார். முதல் பாகத்தை போலவே இதிலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும், இது இதுவரை திரையில் சொல்லப்படாத ஒரு புதிய கோணத்தில் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படம் ஒரு தொடர்ச்சியாக இருந்தாலும், முதல் பாகத்தின் கதை முடிந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து இதன் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரங்கள் தங்களது வாழ்க்கையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதையும், அவர்கள் எதிர்கொள்ளும் புதிய சவால்களையும் இந்தப் படம் அழகாக பேசவுள்ளது. அமீர்கான் இந்த கதையை “மிகவும் அழகான கதை” என்று வர்ணித்ததோடு, இதில் மீண்டும் அந்த பழைய கதாபாத்திரங்களாக நடிக்க தான் மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
ஹிந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ‘3 இடியட்ஸ்’ திரைப்படம், தமிழில் இயக்குநர் ஷங்கரால் ‘நண்பன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான அந்தப் படமும் தமிழகத்தில் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. தற்போது ஹிந்தியில் உருவாகவுள்ள இரண்டாம் பாகம் மீண்டும் அதே வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமீர்கான் விரைவில் பணியாற்ற உள்ள படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதால், இதன் படப்பிடிப்பு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு அமீர்கான், மாதவன் மற்றும் ஷர்மான் ஜோஷி கூட்டணி மீண்டும் இணைய உள்ளது பாலிவுட் வட்டாரத்தில் ஒரு புதிய அலையை உருவாக்கியுள்ளது. கல்வி சூழலில் நடக்கும் மாற்றங்கள் மற்றும் தற்கால சமூக பிரச்சினைகளை இந்த இரண்டாம் பாகம் கையில் எடுக்கும் என்று நம்பப்படுகிறது. ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தப் படம், ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு தரமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை. திரையரங்குகளில் மீண்டும் அந்த ‘இடியட்ஸ்’ கூட்டணி கலாட்டா செய்யப் போவதை எண்ணி ரசிகர்கள் இப்போதே சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
