கடந்த 1967ஆம் ஆண்டு தன்னிடம் மூன்று பேர் உதவியாளராக சேர முயன்றனர் என்றும் ஆனால் தான் மறுத்துவிட்டதாகவும் அதன் பின்னர் அவர்கள் படிப்படியாக முன்னேறி மிகப்பெரிய இயக்குனர் ஆகினர் என்றும் கவிஞர் வாலி பேட்டி ஒன்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கூறியுள்ளார்.
கவிஞர் வாலி ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டார். தந்தை இறந்த நேரம் தாயும் நோய்வாய் படுக்கையில் இருந்த நேரம், தன்னுடைய வயிற்று சாப்பாட்டிற்கு கூட சம்பாதிக்க முடியாத நிலை இருந்தது.
காதல் என்ற வார்த்தை இல்லாமல் கண்ணதாசன் எழுதிய காதல் பாடல்கள்.. கேட்டு வாங்கிய எம்ஜிஆர்..!
அந்த நேரத்தில் அவருக்கு ஒரு சில பாடல்கள் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. கவியரசு கண்ணதாசன் உச்சத்தில் இருந்ததால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் கண்ணதாசனுக்கு மட்டுமே பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தனர்.
இந்த நிலையில்தான் ‘நல்லவன் வாழ்வான்’ என்ற படத்திற்காக வாலி ஒரு பாடல் எழுதினார். எதையும் தாங்கும் இதயம் என்ற அந்த பாடல் நல்ல ஹிட் ஆனாலும் அதன் பிறகு வாலிக்கு பாடல்கள் வாய்ப்பு பெரிதாக கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இனி சினிமாவே வேண்டாம். மதுரைக்கு போய் விடுவோம் என்று வாலி முடிவு செய்தார். மதுரையில் டிவிஎஸ் கம்பெனியில் தனது நண்பர் வேலை பார்த்ததால் அவரிடம் சொல்லி ஒரு வேலை தேடிக் கொள்ளலாம் என்று அவர் முடிவு செய்தார்.
அவர் பெட்டிகளை எடுத்துக் கொண்டு செல்லும்போது தான் அவரை பாடகர் பிபி ஸ்ரீனிவாஸ் சந்திக்க வந்தார். எங்கே செல்கிறீர்கள் என்று அவர் கேட்டபோது, ‘இனிமேல் எனக்கு சினிமா வேண்டாம், நான் மதுரை செல்கிறேன்’ என்று வாலி கூறினார். பிபி ஸ்ரீனிவாஸ் அப்போது, ‘இந்த பாடலை நீ ஒரு முறை கேள், அதன்பிறகு நீ மதுரை செல்ல வேண்டும் என்று முடிவு செய்தால் நான் தடுக்க மாட்டேன்’ என்று கூறினார்.
அந்த பாடல் கண்ணதாசன் எழுதிய ‘மயக்கமா கலக்கமா’ என்ற பாடல்.
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
என்ற வரியை கேட்டதும் இனி சினிமாவிலேயே போராடுவது என்று வாலி முடிவு செய்தார். அதன் பின்னர்தான் அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்பு கிடைத்தது. ஒரு கட்டத்தில் சினிமாவின் உச்சத்திற்கு சென்றார்.
பட்ஜெட்டை விட 800 மடங்கு லாபம்.. எம்ஜிஆர் இயக்கிய முதல் திரைப்படம்..! என்ன படம் தெரியுமா?
இந்த நிலையில் தான் திடீரென கண்ணதாசனிடம் உதவியாளராக சேர வாலிக்கு வாய்ப்பு கிடைத்தது. மாதம் 300 ரூபாய் சம்பளம் என்றும் பேசப்பட்டது. இந்த வாய்ப்பை கண்ணதாசனிடம் கேட்டு வாலிக்கு வாங்கி கொடுத்தவர் இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். ஆனால் அந்த வாய்ப்பை வாலி மறுத்துவிட்டார்.
ஏன் என்று கேட்டபோது, ‘நான் கண்ணதாசனுக்கு எதிராக கடைவிரிக்க வந்திருக்கிறேன், அவரிடமே போய் உதவியாளராக இருந்தால் என்னுடைய தனித்தன்மை போய்விடும். ஒரு டெய்லர் கடையில் வேலைக்கு சேர்ந்தால் கடைசி வரைக்கும் காஜா போட தான் வைப்பார்கள். மிஷினில் உட்கார விடமாட்டார்கள். அதேபோல் நான் கண்ணதாசனின் உதவியாளராக சென்றால் கடைசி வரை உதவியாளராகவே இருக்க வேண்டிய நிலை ஏற்படும், என்னுடைய தனித்தன்மை போய்விடும். இருக்கிற தமிழ் கொஞ்சமாக இருந்தாலும் அதை எப்படி காசு பண்ண வேண்டும் என்று பார்க்க வேண்டுமே தவிர, ஒருவரிடம் உதவியாளராக வேலை செய்ய எனக்கு விருப்பமில்லை’ என்று கூறினார்.
இதனால் ஜி.கே.வெங்கடேஷ் அதிர்ச்சியடைந்து, ‘நீ உருப்படவே மாட்டாய்’ என்று சாபம் விட்டு சென்றார். அன்றைக்கு வாலி எடுத்த முடிவு மிகச் சரியானது என்பது போகப் போக தெரிய வந்தது. அன்றைக்கு மட்டும் அவர் கண்ணதாசனிடம் வேலைக்கு சேர்ந்திருந்தால் அவருடைய தனித்தன்மை மறைந்திருக்கும். கடைசி வரை கண்ணதாசனிடம் அவர் உதவியாளராக இருந்திருப்பார்.
இந்த நிலையில்தான் தன்னிடம் யாரும் உதவியாளராக வேலை கேட்டு வந்தால் அனுமதிக்க கூடாது என்று முடிவு செய்தார். மேலும் தன்னிடம் உதவியாளராக சேர்ந்தால் கடைசி வரை அவர்கள் உதவியாளராக இருக்க நேரிடும் என்பதுதான் அவர் அனுபவத்தில் கற்ற பாடம்.
இந்த நிலையில்தான் மூன்று பேர் தன்னிடம் உதவியாளராக சேர வாய்ப்பு கேட்டு வந்தனர் என்றும், ஆனால் நான் மூவரையுமே சேர்த்து கொள்ள மறுத்துவிட்டேன் என்றும் வாலி கூறியிருந்தார். ஆனால் அதன் பிறகு அந்த மூவருமே தட்டு தடுமாறி திரையுலகில் வெற்றி பெற்றனர். அந்த மூவர்தான் கங்கை அமரன், ராம நாராயணன், மற்றும் ஆர்.சி.சக்தி. பின்னாளில் இந்த மூவரின் படங்களுக்கும் நான் பாடல்கள் எழுதினேன் என்றும் வாலி கூறினார்.
மேலும் என்னிடம் நீங்கள் உதவியாளராக சேர்ந்திருந்தால் இந்த அளவுக்கு பெரிய இயக்குனராக வந்திருக்க மாட்டீர்கள், இது நான் அனுபவத்தில் கற்ற பாடம், எதனால் நான் உங்களை உதவியாளராக சேர்க்கவில்லை என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று அவர்கள் முன்னிலையிலேயே வாலி கூறினார்.
சிவாஜிக்கு ‘நவராத்திரி’.. எம்ஜிஆருக்கு ‘நவரத்தினம்’.. ஏ.பி.நாகராஜனின் 2 வித்தியாசமான படங்கள்..!
நமக்கு என்ன திறமை இருக்கிறதோ அந்த திறமையை வைத்து, நாமாக முன்னேற வேண்டுமே தவிர இன்னொருவருக்கு உதவியாளராக இருந்து நமது திறமையை வீணடிக்க கூடாது என்ற வாலியின் வாழ்க்கை பாடம் நம் அனைவருக்குமே பொருந்தும்.