நாட்டிய பேரொளி என்று கூறினாலே உடனே ஞாபகத்துக்கு வருபவர் பத்மினி. அவர் எம்ஜிஆர், சிவாஜி உடன் பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நடிப்பின் நாயகி என்று பெயர் எடுத்தவர். பத்மினியின் வாழ்க்கையில் நடந்த சில அபூர்வ தகவல்களை தற்போது பார்ப்போம்.
கேரளாவை சேர்ந்தவர் பத்மினி. அவருடன் லலிதா, ராகினி ஆகியோர் பிறந்தனர். 3 சகோதரிகளும் நாட்டியத்தில் சிறுவயதிலிருந்து ஆர்வத்துடன் உள்ளவர்கள். மூவரும் சேர்ந்து சில படங்களில் நடித்துள்ளனர்.
பள்ளியில் படிக்கும் போது மூன்று சகோதரிகளும் நாட்டியத்தில் மிகச்சிறந்த்து விளங்கினாலும் பத்மினிக்கு மட்டுமே அதிக அளவில் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் முதல் முறையாக ’கல்பனா’ என்ற இந்தி திரைப்படத்தில் நடிக்க பத்மினிக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் அவருக்கு சின்ன கேரக்டர் என்பதால் அதன் பிறகு அவருக்கு சின்ன சின்ன கேரக்டர்களாக அதாவது நாட்டியம் ஆடும் பெண்ணின் கேரக்டர்களே அதிகம் வந்தது.
நடிகை பத்மினி கிட்டத்தட்ட 20 முதல் 30 படங்கள் வரை நடனமங்கையாகவே நடித்த நிலையில்தான் சிவாஜி கணேசன் நடித்த இரண்டாவது திரைப்படமான ’பணம்’ என்ற திரைப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்தார். அந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்ததை அடுத்து வேறு சில படங்களில் நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
சிவாஜி கணேசன் உடன் ராஜா ராணி, வியட்நாம் வீடு, இருவர் உள்ளம், மரகதம், தூக்கு தூக்கி, தெய்வப்பிறவி, பேசும் தெய்வம், தங்கப்பதுமை, குலமா குணமா, பாலாடை, தேனும் பாலும் என பல படங்களில் நடித்தார்.
அதேபோல் எம்ஜிஆருடன் ‘மன்னாதி மன்னன்’, ‘விக்கிரமாதித்தன்’, ‘ராணி சம்யுக்தா’, ‘அரசிளங்குமரி’, ராஜா தேசிங்கு’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். எம்ஜிஆர் நடித்த ‘ரிக்சாக்காரன்’ படத்தில் அவருக்கு அக்காவாகவும் பத்மினி நடித்துள்ளார்.
50 வருடங்கள் ஆகியும் மறக்க முடியாத படம்.. தமிழ் சினிமாவின் புரட்சி ‘அவள் ஒரு தொடர்கதை’
குறுகிய காலத்தில் தென்னிந்தியாவின் பிரபல நடிகர்களுடன் நடித்த பெருமை பத்மினிக்கு உண்டு. குறிப்பாக எம்ஜிஆர், சிவாஜி, என்டி ராமராவ், ராஜ்கபூர், பிரேம் நசீர், ஜெமினி கணேசன், எஸ்எஸ்ஆர், முத்துராமன் என பல பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.
சிவாஜிகணேசனுடன் பத்மினி நடித்த ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படம் ஒரு காவிய திரைப்படம் என்பதும் இன்றளவும் அந்த திரைப்படம் ரசிக்கத்தக்க வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ என்ற திரைப்படத்தில் பத்மினி, வைஜெயந்தியமாலா ஆகிய இருவரும் நடனம் ஆடி இருப்பார்கள். ‘கண்ணும் கண்ணும் கலந்தால்’ என்ற பாடலுக்கு இருவரும் போட்டி போட்டு நடனமாடிய நிலையில் ஒரு கட்டத்தில் இருவரில் யாராவது ஒருவர் வெற்றி பெற்றால் இன்னொருவருக்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அந்த நடனப் போட்டியின் முடிவை அறிவிக்காமலே இயக்குனர் அந்த காட்சியை முடித்து விடுவார். அதன் பிறகு வைஜெயந்தி மாலாவுடன் பல ஆண்டுகள் பத்மினி நட்பில் இருந்தார்.
பிசியாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த பத்மினி, அமெரிக்காவைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற தொழிலதிபரை 1961ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் சில படங்களில் நடித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் அமெரிக்காவில் செட்டிலாகக்கூடிய நிலை வந்ததால் அவர் திரைப்படங்களில் இருந்து கிட்டத்தட்ட விலகிவிட்டார் என்று கூறலாம்.
அதனை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ’பூவே பூச்சூடவா’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவின் மீண்டும் பத்மினி ரீஎண்ட்ரி ஆனார். அந்த படத்தில் பத்மினி நடித்தால் மட்டும் தான் அந்த படத்தை இயக்குவேன் என இயக்குனர் ஃபாசில் உறுதியாக இருந்ததை அடுத்து அவருக்காகவே அந்த படத்தில் நடிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்.
அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் சிவாஜி கணேசன் உடன் ‘தாய்க்கு ஒரு தாலாட்டு’ ’லட்சுமி வந்தாச்சு’ உள்ளிட்ட படங்களிலும் ‘ஆயிரம் கண்ணுடையாள்‘ என்ற சாமி படத்திலும் நடித்தார்.
இந்த நிலையில் நடிகை பத்மினி அமெரிக்காவில் நடன பள்ளி ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். இந்தியர்களுக்காகவே நடத்தப்பட்ட அந்த நடனப்பள்ளியில் இந்திய குழந்தைகள் பலர் நடனம் பயின்றனர். பத்மினியின் மகன் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததாக கூறப்பட்டது.
அதுமட்டுமின்றி பத்மினியின் மறைவிற்கு பின்னர் அவர் தான் அந்த நடனப்பள்ளியையும் கவனித்து வருகிறார் என்பதும் அமெரிக்காவில் இயங்கி வரும் மிகப்பெரிய நடனப்பள்ளிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி, கமலுக்கு ஜோடியாகவும் அம்மாவாகவும் நடித்த நடிகை: சுமித்ராவின் சொல்லப்படாத பயணம்..!
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி ஆகிய மூவருடனும் ஜோடியாக நடித்தாலும் பத்மினி மூவரில் எம்ஜிஆருடன் தனிப்பட்ட முறையில் ஒரு சகோதரராக பார்த்தார். ஆனால் சிவாஜியுடன் பத்மினிக்கு காதல் இருந்ததாகவும், சிவாஜியின் அம்மா, பத்மினியை ஏற்று கொள்ளாததால் திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் ஜெமினியுடன் பத்மினிக்கு நட்பு இருந்ததாகவும் கூறப்பட்டது. மொத்தத்தில் எம்ஜிஆருடன் சகோதரியாகவும், சிவாஜியுடன் காதலாகவும், ஜெமினியுடன் நட்பாகவும் இருந்தவர் பத்மினி என்று அப்போது கூறப்பட்டது.