எம்ஜிஆருக்கே விட்டு கொடுத்தவர்.. எம்ஜிஆரையே பகைத்தும் கொண்டவர்.. நடிகர் ஜெய்சங்கர் குறித்த அறியாத உண்மைகள்..!

 தமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட் என்றும் மக்கள் கலைஞர் என்றும் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் ஜெய்சங்கர் ஒரு திரைப்படத்தை எம்ஜிஆருக்கே விட்டுக் கொடுத்தவர் என்றும் அதே நேரத்தில் எம்ஜிஆரையே ஒரு திரைப்படத்தில் பகைத்துக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. அத்தகைய மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் வாழ்க்கையில் நடந்த சில அறியாத தகவல்களை பார்ப்போம்.

நடிகர் ஜெய்சங்கர் திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்டவராக இருந்தாலும் கும்பகோணத்தில் தான் அவர் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். இதனை அடுத்து அவர் சென்னை மயிலாப்பூருக்கு குடும்பத்துடன் வந்தார். சென்னையில் தான் அவர் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.

50 வருடங்கள் ஆகியும் மறக்க முடியாத படம்.. தமிழ் சினிமாவின் புரட்சி ‘அவள் ஒரு தொடர்கதை’

jaishankar 4

இந்த நிலையில் அவர் கல்லூரியில் படிக்கும் போது அவர் யூனியன் செயலாளராக இருந்தார் மற்றும் நாடகத்திலும் நடித்து வந்தார். ஒரு நாள் ஜெய்சங்கர் நடித்த நாடகத்தை எம்ஜிஆர் பார்க்க வந்தபோது அவரை எப்படியாவது கவர்ந்து விட வேண்டும் என்று முடிவு செய்தார்.

அந்த நாடகத்தின் ஒரு காட்சியில் நாற்காலியில் உட்கார வேண்டும். ஆனால் அந்த நாற்காலியில் கால் உடைந்து இருந்ததை அடுத்து அவர் கீழே விழுந்தார். இதனை அடுத்து அரங்கில் இருந்தவர்கள் சிரித்தனர். ஆனால் அவர் என்னை கவிழ்க்க வேண்டும் என்று பலர் சதி செய்வார்கள் ஆனால் நான் அந்த சதியில் இருந்து மீண்டு வருவேன் என்று நாற்காலியில் இருந்து விழுந்ததை கூட சமாளித்தார். இதுதான் எம்ஜிஆரை மிகவும் கவர்ந்தது. அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்து நீ பெரிய ஆளாக வருவாய் என்று வாழ்த்தினார்.

இதனை அடுத்து அவர் சோ ராமசாமியின் நாடகத்தில் நடித்த நிலையில் தான் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஜெய்சங்கர் நடித்த முதல் படமே இரட்டை வேடம் கொண்டது என்பது மட்டுமின்றி ஜெய், சங்கர் ஆகிய இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்தார். அந்த படம் தான் ’இரவும் பகலும்’.

இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ’பஞ்சவர்ணக்கிளி’, ’நீ’, ’எங்க வீட்டுப் பெண்’, ’குழந்தையும் தெய்வமும்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். குறிப்பாக மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் திகில் படங்களை எடுத்து வந்த நிலையில் ஜெய்சங்கரை வைத்து பல படங்கள் எடுத்தது. குறிப்பாக ’வல்லவன் ஒருவன்’, ’சிஐடி சங்கர்’ போன்ற படங்கள் ஜெய்சங்கருக்கு மிகப்பெரிய புகழை பெற்று கொடுத்தது.

ரஜினி, கமலுக்கு ஜோடியாகவும் அம்மாவாகவும் நடித்த நடிகை: சுமித்ராவின் சொல்லப்படாத பயணம்..!

தமிழ் சினிமாவில் ஜேம்ஸ் பாண்ட் என்று போற்றப்பட்ட நிலையில் பல சிஐடி படங்களில் நடித்தார் என்பதும் கௌபாய் படங்களில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ’துணிவே துணை’ ‘எங்க பாட்டன் சொத்து’ போன்ற படங்கள் சூப்பர் ஹிட் ஆகின.

இந்த நிலையில் தான் எம்ஜிஆர் உடன் ஒரு படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. முதல் நாள் படப்பிடிப்புக்கு சென்ற போது மூன்று மணி நேரம் காத்திருந்தும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. தன்னை நம்பி பல தயாரிப்பாளர்கள் காத்திருக்கும் நிலையில் ஒரு திரைப்படத்திற்காக தன்னால் அதிக நேரம் ஒதுக்க முடியாது என்று முடிவு செய்த ஜெய்சங்கர் முதல் நாளே அந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனால் எம்ஜிஆர் அவர் மீது வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுவதுண்டு.

இந்த நிலையில் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த ’அன்பே வா’ என்ற திரைப்படத்தில் நடிக்க முதலில் ஜெய்சங்கர் தான் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் அந்த படத்தின் கதையை கேட்ட எம்ஜிஆர் அந்த படத்தில் தான் நடிக்க விரும்புவதாக கூறியதை அடுத்து எம்ஜிஆருக்கு அந்த படத்தை விட்டுக் கொடுத்தார்.

jaishankar 3

ஒரு கட்டத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு குறைந்து வந்ததை அடுத்து அவர் வில்லனாக நடிக்க முடிவு செய்தார். முதல் முதலாக அவர் ரஜினிகாந்த் நடித்த ’முரட்டுக்காளை’ என்ற திரைப்படத்தில் தான் வில்லனாக நடித்தார். அந்த படத்தில் விஜயகாந்த் தான் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, ஆனால் கடைசிவரை தான் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று அவர் கூறியதை அடுத்து ஜெய்சங்கர் அந்த படத்தில் வில்லனாக நடித்தார்.

jaishankar

அதன்பிறகு ரஜினிகாந்த் நடித்த ’துடிக்கும் கரங்கள்’, ’படிக்காதவன்’ உள்பட பல படங்களில் அவர் வில்லனாக நடித்தார். அதேபோல் கமல்ஹாசன் படங்களில் சில படங்களில் வில்லனாக நடித்தார்.

இதையடுத்து அப்பா, அண்ணன் போன்ற குணச்சித்திர கேரக்டர்களில் நடித்தார். குறிப்பாக அவர் ’ஊமை விழிகள் என்ற திரைப்படத்தில் பத்திரிகையாளராக நடித்தது அனைவரையும் கவர்ந்தது. அதேபோல் மணிரத்னம் இயக்கிய ’தளபதி’ திரைப்படத்தில் அரவிந்த்சாமி தந்தையாக நடித்திருப்பார். அதில் ரஜினிகாந்த் உடன் அவர் உரையாடும் காட்சி அனைவரையும் கவர்ந்தது.

jaishankar 5

சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பெற்றாலும் தன்னுடைய வாரிசுகளை அவர் சினிமாவில் அறிமுகப்படுத்த விரும்பவில்லை. தனது மகன் விஜய் சங்கரை அவரது விருப்பத்திற்கு ஏற்ப கண் டாக்டருக்கு படிக்க வைத்தார். எம்ஜிஆரை விட மிக அதிகமாக உதவி செய்யும் குணம் ஜெய்சங்கருக்கு உண்டு. ஆனால் அவர் அதை விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை.

அதே போல் தனது மகனையும் மக்களுக்கு உதவி செய்வதற்காக டாக்டர் தொழிலை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். இன்றும் அவரது மகன் பல இலவச அறுவை கண் சிகிச்சைகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

jaishankar 2

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒருநாள் தனது மனைவி மற்றும் மகனுடன் பைக்கில் செல்வதை பார்த்தார். அப்போது அவர் எஸ்.ஏ சந்திரசேகரை அழைத்து என்னிடம் உள்ள கார்களில் ஏதாவது ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். ஆனால் இலவசமாக நான் காரை பெற மாட்டேன் என்று எஸ்ஏ சந்திரசேகர் கூறியதை அடுத்து, ‘உங்களால் எப்போது பணம் கொடுக்க முடியுமோ அப்பொழுது கொடுங்கள் அல்லது தவணை முறையில் கூட கொடுங்கள்’ என்று கூறி தன்னுடைய விலை உயர்ந்த காரை எஸ் ஏ சந்திரசேகருக்கு கொடுத்தார். விஜய்யின் தந்தைக்கு அந்த காலத்தில் கார் கொடுத்தார் என்றால் அது ஜெய்சங்கர் தான்.

சொந்த விமானம்.. ராயல் என்ஃபீல்டு பைக்.. மாளிகையில் வாழ்க்கை. புன்னகை அரசி கே.ஆர். விஜயாவின் அறியாத தகவல்..!

இந்த நிலையில் நடிகர் ஜெய்சங்கர் கடந்த 2000ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக தனது 61வது வயதில் காலமானார். அவர் மறைந்தாலும் அவரது ஜேம்ஸ் பாண்ட் பாணி படங்கள் இன்னும் ரசிகர்கள் மனதில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews