தலைப்பைப் படித்தவுடன் இதை… இதைத்தானே இத்தனை நாளும் எதிர்பார்த்தேன்… என்கிறீர்களா? முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எதுவுமே சுலபமாகக் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைத்தால் அது நிலைப்பதில்லை. இப்போது புரிந்திருக்கும். அப்படி என்றால் நிலையான மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும் வழி என்ன? அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆத்மாவை உணர்தல் தான். உங்களை நீங்களே உணர்ந்து கொள்ளும்போது பல விஷயங்கள் பிடிபடுகின்றன. அவை என்னென்ன என்று பார்ப்போம்.
சனத்குமாரா என்ற மகாயோகியை நாரதர் அணுகி அய்யனே, எனக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நல்லது. நாரதரே. உனக்கு உபதேசம் செய்யும் முன் ஒரே ஒரு வார்த்தை. உனக்கு முதலில் என்ன தெரியும் என்பதை முன்கூட்டியே சொல்லி விடு. அப்போது தான் உனக்கு என்ன உபதேசம் சொல்லித்தர வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்றார் யோகி.
நாரதர் குருதேவா எனக்கு ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் தெரியும். புராண இதிகாசங்கள் எல்லாமே தெரியும். வேதங்களின் வேதமான இலக்கணம், பித்ரு, கல்பம், கணிதசாத்திரம், காலநிர்ணயம், தர்க்க சாஸ்திரம், நீதி சாஸ்திரம், நிருத்தம், பூதவித்தை, போர்முறை, வானசாஸ்திரம், சர்வ வித்தை, கந்தர்வ வித்தை இவை அனைத்துமே தெரியும் என்றார் நாரதர். தொடர்ந்து ஒரு சந்தேகத்தையும் கேட்டார்.
தேவா, இவ்வளவு வேதமந்திரங்களையும் நான் கற்றுக்கொண்டேனே தவிர, துன்பங்களைக் கடந்து செல்லும் ஆத்ம யோகத்தை நான் அறியவில்லை. எவன் ஒருவன் ஆத்மாவை அறிந்து கொள்கிறானோ அவனே துன்பத்தைக் கடப்பான் என நான் பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.
தயைக்கூர்ந்து எனக்கு துன்பத்தைக் கடக்கும் மார்க்கத்தை கற்றுத் தர வேண்டும் என்றார். யோகி சிரித்தார். நாரதரே நீர் கற்றுக்கொண்ட வித்தைகள் எல்லாம் பெயரளவு உள்ளவையே. அவற்றை விட பெரிய விஷயங்கள் சில உண்டு. அவற்றின் மூலம் மட்டுமே ஆத்மாவை அறிய முடியும் என்றார். தொடர்ந்து எவை எவை பெரியவை என்று கேட்டார் நாரதர்.
நீ சொன்ன எல்லா பெயர்களையும் விட வாக்கு பெரியது. எப்படி ஒரு கைப்பிடிக்குள் 2 நெல்லிக்கனியோ, இலந்தைப் பழமோ அடங்கி விடுகிறதோ, அப்படியே பெயரும், வாக்கும் மனதிற்குள்ளேயே அடங்கி விடும். மனதால் நினைத்த பஜன’ தானே நீ சொல்லுகின்றாய். செயலில் இறங்குகின்றாய்.
அந்த மனம் தான் ஆத்மா. அந்த மனது தான் உலகம். அந்த மனம் தான் பிரம்மம். ஆகையால் மனதை நேசிப்பாயாக. ஆனால் இன்னொன்று. சங்கல்பம் செய்வது மனதை விட பெரியது. எப்போது ஒருவன் சங்கல்;பம் செய்யத் தொடங்குகிறானோ அப்போது யோசிக்கத் தொடங்குகின்றான். அது மனது. உடனே பேச ஆரம்பிக்கின்றான்.
அது வாக்கு. இது பெயர் வடிவம் பெறுகின்றது. அதில் மந்திரங்கள் ஒடுங்கி விடுகின்றன. மந்திரங்களில் கருமங்கள் ஒடுங்கி விடுகின்றன. அதே நேரத்தில் சங்கல்பத்தைக் காட்டிலும் தியானம் பெரியது. பூமி, வானம், மலைகள் என எல்லாமே தியானம் செய்கின்றன. பெரிய பெரிய மனிதர்கள் தியான பலத்தில் ஒரு அம்சத்தையாவது பெற்றிருக்கின்றனர். அற்பர்களுக்கும், கலகக்காரர்களுக்கும் அது வாய்ப்பதில்லை.
தியானத்தை விட விஞ்ஞானம் பெரியது. ஆத்ம பலம் விஞ்ஞானத்தைக் காட்டிலும் பெரியது. விஞ்ஞானம் என்பது அனுபவம். அவ்வளவு தான். ஆத்ம பலம் படைத்த யோகி 100 விஞ்ஞானவான்களை ஆட்டி வைக்க முடியும். ஒருவன் பலமுள்ளவனாக இருந்தால் அவன் படுக்கையில் கிடக்க மாட்டான். எழுவான். நடப்பான். சேவை செய்வான். நாரதருக்கும், சனத்குமாரருக்கும் நடந்த இந்த விவாதத்தில் ஆத்ம பலனே பேசப்படுகிறது.
ஆத்ம பலம் என்பது தன்னை உணர்தல். நானே பிரம்மம். நானே ஈஸ்வரன் என்ற நிலையை எய்தி தரும். கடமைகளை ஒழுங்காகச் செய்வதன் மூலம் ஆத்மா பலம் பெறுகிறது.
இதற்கு ஒரு குட்டிக் கதை உண்டு. ஒரு நதியிலே வெள்ளம் வந்தது. பாலத்தின் இரண்டு பக்கங்களையும் அடித்துக் கொண்டு போய்விட்டது. பாலத்தில் ஒரு குடும்பம் தத்தளித்துக்கொண்டு இருந்தது. அதைப் பார்த்து ஒரு பழக்காரன் ஒரு ஓடக்காரனை அழைத்து அவர்களைக் காப்பாற்றும்படியும் 100 ரூபாய் தருவதாகவும் சொன்னான்.
ஓடக்காரன் அவர்களைக் காப்பாற்றினான். தன்னிடமிருந்த 100 ரூபாயை எடுத்துக் கொடுத்தான். ஓடக்காரனோ இது என் கடமை என்று சொல்லி, பணத்தை வாங்க மறுத்துவிட்டான். இந்த பலன் கருதா கருமமே கடமை. இதைக் கருமம் என்பதை விட தர்மம் என்பதே பொருந்தும். இத்தகைய தர்மம் தக்க சமயத்தில் தலைமாட்டில் இருந்து கொண்டு நம்மைக் காப்பாற்றும்.
நான் அப்படி. நான் இப்படி என்ற அகங்காரம் கடைசி காலத்தில் உதவாது. முதலில் நான் என்ற தன்மை ஒழிய வேண்டும். அப்படி ஒழித்தவர்கள் தான் பெரிய யோகிகளாக மாறுகிறார்கள். அவர்களிடம் இறைவன் வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டால், பொன்னைக் கொடு. பொருளைக் கொடு. வேலையைக் கொடு என்று கேட்க மாட்டார்கள்.
என்னையே எனக்குக் கொடு என்று தான் கேட்பார்கள். இப்படி தன்னை உணர்ந்து கொண்டு மனிதன் மரணத்தில் இருந்து விடுதலை பெறுகிறான். அவன் செத்துவிட்டான் என்று சொன்னால், அவன் உடம்பு தான் செத்துவிட்டது. ஆத்மா சாகவில்லை என்று பொருள். என்னையே எனக்குக் கொடு என்ற தத்துவத்தில் ஆன்மாவாகவே உணரப்படுகிறது.