இன்று சித்தர் அருள் கிடைக்கணுமா? இப்படி தியானம் பண்ணுங்க… கண்டிப்பா அந்த அதிசயம் நடக்கும்!

இன்று சித்ரா பௌர்ணமி (12.5.2025). மகத்துவமான நாள். தஞ்சை பெரிய கோவிலில் பௌர்ணமி தினம் சித்ரா பௌர்ணமி விழாவை சித்தர் பெருவிழா என்றே நடத்துவர்.. நந்தி எம்பெருமானுக்கும், கருவூராருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.…

இன்று சித்ரா பௌர்ணமி (12.5.2025). மகத்துவமான நாள். தஞ்சை பெரிய கோவிலில் பௌர்ணமி தினம் சித்ரா பௌர்ணமி விழாவை சித்தர் பெருவிழா என்றே நடத்துவர்.. நந்தி எம்பெருமானுக்கும், கருவூராருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்னதானமும் செய்வார்கள். இதில் பங்கேற்றால் சித்தர் பெருமான் கருவூராரின் அருளை பெறலாம்.

சித்தர்கள் பெரும்பாலும் ஏழை எளியவர்களின் பசியை போக்க அன்னதானம் செய்யுங்கள் என்பதையே வலியுறுத்தி உள்ளனர். எனவே முடிந்தால் சித்ரா பௌர்ணமி அன்று அன்னதானம் செய்யுங்கள். இல்லையெனில் எங்காவது அன்னதானத்துக்கு உதவி செய்யுங்கள். இதை கருத்தில் கொண்டே 24 மணி நேரமும் இலங்கையில் சித்தர்கள் வாசம் செய்யும் வேலோடு மலையில் திருப்பணி செம்மல் தியாகராஜா சந்திரா குடும்பத்தினர் எப்போது யார் வந்தாலும் அன்னதானம் கொடுக்கிறார்கள்.

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் கணக்கில் அடங்காத சித்தர்களை தரிசனம் செய்ய முடியும். குறிப்பாக கோரக்கர் சித்தரை நினைத்து தியானம் செய்தால் நிச்சயமாக அவரது தரிசனத்தை சதுரகிரியில் பெற முடியும். சதுரகிரியில் சித்தர்களின் முக்கிய ஆசியாக நமக்கு நல்ல உடல்நலம் கிடைக்கும். 16 வகை பேறுகளில் ஒன்று நோயின்மை. சித்ரா பௌர்ணமி வழிபாட்டுக்கும் நோயின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சித்தர்கள் கண்டுபிடித்து கூறி உள்ளனர்.

எனவே எந்த அளவுக்கு நாம் முழு மனதுடன் சித்தர்களை வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு நன்மைகள் கிடைக்கும். இலங்கையில் வேலோடு மலையில் போகர் பெருமான் பூஜித்த வேலுக்கு பின்புறம் 18 சித்தர்களின் சன்னதி உள்ளது. அந்த பகுதியில் பௌர்ணமி தினம் அமர்ந்து தியானம் செய்தாலே போதும், சித்தர்கள் உங்களுக்குள் ஊடுருவுவார்கள்.

அதுபோல திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்திலும் கிரிவலத்தின்போது சித்தர்களின் அருளை பெறலாம். திருச்செங்கோடு மலையானது ஓங்கார வடிவில் அமைந்தது. எனவே அங்கு சித்தர்கள் அருள் அதற்கேற்ப கிடைக்கும்.

நாகை மாவட்டம் எட்டுக்குடி முருகன் கோவிலில் பதினெண் சித்தர்களில் ஒருவரான வால்மீகி சித்தர் அடங்கியுள்ளார். சித்ரா பௌர்ணமி தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதில் பங்கேற்றால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.

ஆலயங்களில் மட்டுமின்றி சித்ரா பௌர்ணமி தினம் ஜீவ சமாதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். உங்களுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு சித்தரின் ஜீவ சமாதிக்கு சென்று வழிபாடு செய்தால் சித்ரா பௌர்ணமி வழிபாட்டுக்குரிய அனைத்து பலன்களையும் நிச்சயம் பெற முடியும்.

சிங்கம்புணரியில் புகழ்பெற்ற முத்து வடுகநாதர் ஜீவ சமாதி அமைந்துள்ளது. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அந்த ஜீவ சமாதி தலத்தில் சித்தரின் திருஉருவ சிலையை தேரில் வைத்து நகர் வலமாக எடுத்து செல்வார்கள். அப்போது சித்தரை வழிபட்டால் நாம் கேட்டது எல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சித்தர்களை வழிபடச் செல்லும் முன்பு சித்ரா பௌர்ணமி அன்றுகாலை வீட்டில் குளித்து முடித்து விட்டு உங்களது குல தெய்வம், இஷ்ட தெய்வத்தை வணங்குங்கள். முடிந்தவர்கள் சக்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவது நல்லது. மாலையில் சந்திரனை பார்த்து விட்டு ஜீவ சமாதிக்கு சென்று வழிபடுங்கள் அல்லது சித்தர்களை நினைத்தப்படி கிரிவலம் வாருங்கள். உங்களது தேடல் உண்மையாக இருந்தால் நிச்சயம் உங்களுக்கு அவர்கள் ஏதோ வடிவத்தில் தரிசனம் தந்து உணர்த்துவார்கள்.