மே 10-ஆம் தேதி “ஆபரேஷன் சிந்தூர்” எனும் திட்டத்தின் கீழ் இந்தியா மேற்கொண்ட துல்லியமான வான்வழி தாக்குதல்களில் சேதமடைந்த ராணுவ தளங்களை பழுது பார்த்து பழைய நிலைக்குத் திருப்புவதற்காக பாகிஸ்தான் புதிய டெண்டர்களை வெளியிட்டுள்ளது.
இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு & காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை பாகிஸ்தான் பயங்கரமாக தாக்கியதை இந்தியா கொடுத்த பதிலடி தான், நூர்கான் ஏர் ஸ்பேஸ் மீதான தாக்குதல் ஆகும்.
இந்நிலையில் மே 12 முதல் மே 14 வரை, பாகிஸ்தானின் ராவல்பிண்டி, ரிசால்பூர் மற்றும் கலர் கஹார் ஆகிய முக்கிய ராணுவ மற்றும் விமானப்படைத் தளங்களில் பழுது பார்த்து பராமரிப்பதற்காக சுமார் ஐந்து டெண்டர்களை வெளியிட்டது. இவை அனைத்தும் இந்திய தாக்குதல்களில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த டெண்டர்கள் அவசர பழுதுபார்ப்பு பணிகளை விவரிக்கின்றன. இதன் மூலம் இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதல்களின் தாக்கத்தை மறைமுகமாக உறுதி செய்கின்றன.
முதலில், பாகிஸ்தான் அதிகாரிகள் இந்திய தாக்குதல்களில் பெரிதாக சேதம் ஏற்படுத்தவில்லை என கூறினார்கள். ஆனால் நேற்று பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் அதிகாரப்பூர்வமாக மே 10 அன்று இந்தியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் நூர் கான் விமானத் தளம் உள்ளிட்ட பல இடங்களை தாக்கியது என்று ஒப்புக்கொண்டார். இது, நான்கு நாள் ராணுவ பதற்றத்திற்கு பிறகு பாகிஸ்தான் அரசின் முதல் அதிகாரப்பூர்வ ஒப்புக்கோளாகும்.
இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் நினைவுச்சின்ன விழாவில் உரையாற்றிய போது, பிரதமர் ஷரீஃப் கூறினார்:
“மே 7-ஆம் தேதி அதிகாலை 2:30 மணிக்கு ஜெனரல் ஆஸிம் முநீர் என்னை நேரில் அழைத்து இந்த தாக்குதல் குறித்து தகவல் அளித்தார். அது மிக கவலை நிறைந்த தருணமாக இருந்தது,” என இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.