மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் கடும் பதற்றம் தற்போது சர்வதேச கடல்சார் வணிகத்தை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, உலக நாடுகளின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றி அரங்கேறி வரும் மோதல்கள் உலக நாடுகளை அதிருப்தியடைய செய்துள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை தொடர்ந்து, ஈரானுடனான அமைதி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், போர் நிறுத்தம் தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டாலும் கடல் வழி முற்றுகை மட்டும் விலக்கப்படவில்லை. ஈரானிய துறைமுகங்களுக்குள் எந்த கப்பலும் நுழைய முடியாதபடி அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டுள்ளதால், அதற்கு பதிலடியாக ஈரான் அரசு ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதோடு, அந்த வழியாக வரும் கப்பல்களை தாக்கி சிறைபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்த மோதலின் ஒரு பகுதியாக, ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற இரண்டு இந்திய சரக்கு கப்பல்களை ஈரான் புரட்சிகர காவல் படை அதிரடியாகத் தாக்கி சிறைபிடித்துள்ள சம்பவம் இந்தியாவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் இருந்து குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த ஒரு கப்பல் உட்பட, பனாமா மற்றும் லிபிய நாட்டுப் பெயர்களில் இயங்கி வந்த அந்த இரண்டு கப்பல்களும் கடல் வழி சிக்னல்களை அணைத்துவிட்டு ரகசியமாக செல்ல முயன்றபோது ஈரானியப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஈரானிய படையினர் அக்கப்பல்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி, அவற்றை பலவந்தமாகத் தங்கள் நாட்டு துறைமுகத்திற்கு இழுத்து சென்றுள்ளனர். சம்பந்தப்பட்ட கப்பல்கள் முறையான அனுமதி பெறவில்லை என்றும், கடல் வழித்தட தரவுகளில் மோசடி செய்ததாகவும் ஈரான் கடற்படை குற்றம்சாட்டியுள்ளது.
இந்திய கப்பல்கள் தவிர, பிரிட்டனுக்கு சொந்தமான மூன்று கப்பல்களும் இதே போன்ற தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. முன்னதாக ஓமன் வளைகுடாவில் ஈரானிய கப்பல்களை அமெரிக்கா பறிமுதல் செய்ததற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே ஈரான் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த தொடர் மோதல்களால் எண்ணெய் டேங்கர் கப்பல்கள் தடையின்றி செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளதால், உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. வல்லரசு நாடுகளின் இந்த அதிகார போட்டியால் சர்வதேச பொருளாதாரம் பெரும் சரிவை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியை தனது நாடு முழுமையாக கட்டுப்படுத்துவதாக கூறி வந்தாலும், கள நிலவரம் வேறாக உள்ளது. அமெரிக்காவின் தடையை மீறி சுமார் 34 கப்பல்கள் வளைகுடா பகுதியை தாண்டி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 19 கப்பல்கள் ஈரானில் இருந்து வெளியேறியுள்ளன, மேலும் 15 கப்பல்கள் அரபிக்கடல் வழியாக ஈரானை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் முற்றுகைக்கு ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டு இவ்வளவு கப்பல்கள் பயணிப்பது அமெரிக்க பாதுகாப்பு துறையினருக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய சூழலில், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், தனது துறைமுகங்கள் மீதான முற்றுகையை அமெரிக்கா முழுமையாக விலக்கினால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியை திறப்போம் என்பதில் ஈரான் பிடிவாதமாக உள்ளது. அதேசமயம், நிரந்தர ஒப்பந்தம் ஏற்படும் வரை எவ்வித சலுகையும் வழங்க முடியாது என அமெரிக்காவும் கறாராக கூறி வருகிறது. இந்த இரு நாடுகளின் பிடிவாதத்திற்கு இடையே இந்திய கப்பல்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பது, இந்தியாவின் எரிபொருள் இறக்குமதி மற்றும் கடல்சார் பாதுகாப்பில் பெரும் சவால்களை உருவாக்கியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
