ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் சமாதான பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், நிபந்தனையற்ற போர் நிறுத்தம் இல்லை என்று ரஷ்யா கூறிவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று பயங்கரமான தாக்குதலில் உக்ரைன் ஈடுபட்டது என்பதும், இதில் ₹700 கோடி மதிப்புள்ள ரஷ்யாவின் 40க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் சேதம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து, கடந்த மாதம் முதல் கட்ட அமைதி பேச்சு வார்த்தை துருக்கியில் நடந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை இரு நாட்டின் அதிகாரிகள் இடையே அதே துருக்கியில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் கைதிகளை பரிமாறிக் கொள்வது, குறிப்பாக குழந்தைகளை பரிமாறிக் கொள்வது குறித்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதாகவும், அதற்கு ரஷ்யாவும் சம்மதித்துள்ளதாகவும் தெரிகிறது.
ஆனால், அதே நேரத்தில், நிபந்தனையற்ற போர் நிறுத்தம் வேண்டும் என்று உக்ரைன் தரப்பு கூறியதற்கு, ரஷ்யா ஒப்புக்கொள்ளவில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜூன் இறுதியில் நடைபெறும் என்றும், இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டதாக உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ரஷ்யாவில் இருந்து தற்போது பதட்டங்கள் அதிகரித்துள்ளதாகவும், உக்ரைன் நாட்டின் பயங்கரமான தாக்குதலுக்கு ஒரு சக்திவாய்ந்த தாக்குதல் பதிலடியாக நடத்த வேண்டும் என்று ரஷ்ய தரப்பிலிருந்து பலர் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இன்று இரவு அல்லது நாளை கண்டிப்பாக ரஷ்யாவிடமிருந்து ஒரு பெரிய தாக்குதல் வரலாம் என்று உக்ரைன் எதிர்பார்த்து உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.