தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், ஒவ்வொரு தொகுதிக்கும் பிரச்சாரத்துக்கு செல்லும்போது, அந்த தொகுதியில் உள்ள பிரச்சனைகளை மக்களிடம் கொண்டு சென்று, தி.மு.க.வை மட்டும் அல்லாமல், இதற்கு முன்பு ஆட்சி செய்த அ.தி.மு.க.வையும் சேர்த்து ‘சுளுக்கு எடுப்பார்’ என தமிழக வெற்றி கழகத்தின் காமேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை விஜய் தொடங்கியபோது பெரிய அளவில் பரபரப்பு இல்லை. ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க விஜய் கட்சியை இரண்டு திராவிடக் கட்சிகளுமே ஒரு பெரிய போட்டியாக பார்க்கின்றன. அதுமட்டுமின்றி, அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளின் அடிப்படை வாக்குகளிலேயே விஜய் கை வைக்கிறார் என்பதுதான் இரு கட்சிகளுக்கும் ஏற்பட்ட பெரும் சவாலாக உள்ளது.
குறிப்பாக, தி.மு.க.வின் நிரந்தர ஓட்டு என்று கூறப்பட்ட சிறுபான்மையினர் ஓட்டுகளிலேயே 50% விஜய் ‘கைப்பற்றுகிறார்’ என்று கூறப்படுகிறது. அதைபோல், பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை இதுவரை தி.மு.க. மட்டுமே அறுவடை செய்து வந்த நிலையில், தற்போது விஜய்யும் அதில் பங்கு பெறுகிறார் என்பதுதான் பெரும் சவாலாக உள்ளது. படிப்படியாக குறைந்து வரும் இந்த இரண்டு கட்சிகளின் வாக்கு சதவீதங்கள் எல்லாம் விஜய்க்குத்தான் செல்கிறது. மொத்தத்தில், விஜய் வாக்குகளை கை வைக்காத கட்சியே இல்லை என்று கூறும் அளவுக்கு அவரது செயல்பாடுகள் இருந்து வருவதாக புலப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் காமேஷ் சமீபத்தில் பேட்டி அளித்தபோது, “விஜய் அண்ணா 234 தொகுதிகளுக்கும் பிரச்சாரம் செய்யப் போகிறார். அப்போது ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பிரச்சனைகளை மக்கள் முன் நிறுத்துவார். தி.மு.க.வை மட்டும் அல்லாமல், கடந்த காலத்தில் ஆட்சி செய்த அ.தி.மு.க.வையும் சேர்த்து சுளுக்கு எடுப்பார். அப்போது தெரியும் விஜய் யார் என்று,” என்றார். மேலும், “விஜய் ‘கற்றுக்குட்டி’ என்று சொல்பவர்கள் விஜய்யை பார்த்து பயப்படுபவர்கள் தான். தங்களை பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ள வேண்டும் அல்லது விஜய் பெரிய ஆளாக வந்துவிடுவாரோ என்ற பயத்தின் காரணமாகத்தான் விஜயை ‘கற்றுக்குட்டி’ என்று விமர்சனம் செய்கிறார்கள்,” என்றும் காமேஷ் தெரிவித்துள்ளார்.
விஜய் களத்தில் இறங்கிவிட்டால் அவரது பிரச்சாரம் வேற லெவலில் இருக்கும் என்று ஏற்கனவே அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இப்போதே தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட இரண்டு திராவிட கட்சிகளும் அந்த பிரச்சனைகளைச் சரிசெய்ய முயற்சி எடுத்தார்களா, அப்படி எடுத்த முயற்சிகள் வெற்றியில் முடிந்ததா என்பதை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், விஜய் பிரச்சாரம் செய்யும்போது புள்ளிவிவரங்களுடன் அவர் தெரிவிக்கும் ஆதாரங்கள் அந்த தொகுதி மக்களுக்கே தெரியாத வகையில் இருக்கும் என்றும், கண்டிப்பாக விஜய் இரண்டு திராவிட கட்சிகளையும் பிரச்சாரத்தின்போது ‘சுளுக்கு எடுப்பார்’ என்றும் கூறப்பட்டு வருகிறது.
மொத்தத்தில், விஜய் தனது பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டால், அவரது பிரச்சாரத்தை முறியடிக்க இரண்டு திராவிடக் கட்சிகளும் மிகப்பெரிய அளவில் போராட வேண்டி இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.