சட்டமன்ற தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பு என்பது திமுவினர் தங்களுக்குள் தீவிரமான சுயபரிசோதனையை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. தாங்கள் நல்லாட்சியை மட்டுமே வழங்கியதாகவும், தமிழ்நாட்டை வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் அக்கட்சியினரும் மேடைக்கு மேடை முழங்கி வருகின்றனர். குறிப்பாக, இந்தியாவிலேயே இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டியதாகக் கூறப்படும் புள்ளிவிவரங்களை முன்வைத்துத் தங்கள் மீதான விமர்சனங்களை அவர்கள் மழுப்பப் பார்க்கிறார்கள்.
ஆனால், வெறும் எண்களும் அறிக்கைகளும் மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையவில்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் அப்பட்டமாக தோல்வியின் மூலம் உணர்த்தியுள்ளன. சாதனைகளை பட்டியலிடுவதை விட, மக்கள் ஏன் இந்த ஆட்சியை தூக்கி எறியும் முடிவுக்கு வந்தார்கள் என்பதை நடுநிலையோடு சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாகும்.
தமிழக அரசியலில் ஒரு ஆளுங்கட்சிக்கு எதிராக இவ்வளவு பெரிய கோபத்துடன் கூடிய எதிர்ப்பலை உருவாவது என்பது சாதாரணமாக நடப்பதல்ல. மக்கள் எதனால் நம்பிக்கை இழந்தார்கள் என்பதைக் கண்டறியாமல், வெற்றியை பறி கொடுத்ததற்கு காரணங்களாக பாஜகவின் சதி அல்லது ஈவிஎம் முறைகேடு போன்ற புகார்களை அடுக்குவது தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் செயலாகும்.
முதலமைச்சர் தனது சொந்த தொகுதியிலேயே தோல்வியை தழுவியதும், செல்வாக்கு மிக்க அமைச்சர்கள் பலரும் மக்களால் நிராகரிக்கப்பட்டதும் திமுகவின் மீதான அதிருப்தி எவ்வளவு ஆழமாக வேர்விட்டுள்ளது என்பதற்கு சான்றாகும். ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது ஏற்பட்ட ஒருவித தலைக்கனம் மற்றும் அடித்தட்டு மக்களின் உண்மையான தேவைகளை புறக்கணித்த விதம் ஆகியவை இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
திமுகவின் இந்த தோல்விக்கு வெறும் அரசியல் காரணங்கள் மட்டுமல்லாமல், நிர்வாக சீர்கேடுகளும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. அரசு எந்திரத்தை சரியாக கையாள தவறியது, ஊழல் புகார்கள் எழுந்தபோது அவற்றின் மீது மெத்தனமாக செயல்பட்டது மற்றும் மக்களின் குறைகளை காதுகொடுத்து கேட்காத அதிகார வர்க்கத்தின் போக்கு ஆகியவை பொதுமக்களிடையே பெரும் ஆத்திரத்தை மூட்டியது.
தேர்தல் வெற்றியை பணபலம் அல்லது உத்திகள் மூலம் ஈட்டிவிடலாம் என்று நினைத்த திமுக நிர்வாகிகளுக்கு, அமைதியான புரட்சியின் மூலம் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டியுள்ளனர். “நாங்கள் எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்தோம்” என்ற பிடிவாதம், ஒரு ஜனநாயக நாட்டில் எடுபடாது என்பதையும், மக்கள் எப்போது வேண்டுமானாலும் அதிகாரத்தை மாற்றியமைப்பார்கள் என்பதையும் இந்த தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்த தேர்தல் முடிவை ஒரு புள்ளிவிவரமாக பார்க்காமல், மக்களின் ஒரு எச்சரிக்கையாக கொள்ள வேண்டும். தாங்கள் செய்த தவறுகளை எந்த இடத்திலும் ஒப்புக்கொள்ளாமல், சாதனைகளை மட்டுமே பேசிக்கொண்டிருப்பது என்பது மக்களின் காயங்களில் உப்புப் பூசுவது போன்றது. எந்தெந்த இடங்களில் தவறு நடந்தது, எந்தெந்த வாக்குறுதிகள் வெறும் காகிதத்தோடு நின்றன என்பதை அவர் வெளிப்படையாக ஆராய வேண்டும்.
தவறு செய்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை காப்பாற்ற முனையாமல், மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு திருத்திக் கொள்வதே ஒரு முதிர்ச்சியுள்ள தலைவருக்கு அழகாகும். அத்தகைய வெளிப்படைத்தன்மை மட்டுமே இழந்த நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான முதல் படியாக அமையும்.
திமுக அமைச்சர்களும், கட்சி பொறுப்பாளர்களும், அவர்களுக்கு துணை நின்ற அதிகாரிகளும் தத்தமது செயல்பாடுகள் குறித்து தனித்தனியே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு நிர்வாகம், குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்காக மட்டுமே இயங்கியதோ என்ற ஐயம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
அதிகாரத்தில் இருக்கும்போது தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை கடைபிடித்த அணுகுமுறை மக்களிடம் விலகலை ஏற்படுத்தியது. “எங்கள் அணிக்கு இத்தனை கோடி மக்கள் வாக்களித்துள்ளனர்” என்று கணக்கு காட்டி தப்பித்துக்கொள்ள முயல்வது, தோல்வியின் தீவிரத்தை குறைத்து மதிப்பிடுவதாகும். அழுகாச்சி நாடகங்களோ அல்லது தொழில்நுட்ப கோளாறு குறித்த புகார்களோ மக்களின் உண்மையான ஆவேசத்தை மறைக்க முடியாது என்பதை அவர்கள் உணர வேண்டும்.
முடிவாக, மக்கள் தீர்ப்பினை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்வது என்பது வெறும் சொல்லளவில் இருக்கக்கூடாது. அது செயலில் எதிரொலிக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்ற உறுதியான வாக்குறுதியையும், அதற்கேற்ற மாற்றங்களையும் திமுக முன்னெடுக்க வேண்டும்.
கடந்த கால பாடங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுக்கும் எந்தவொரு இயக்கமும் வரலாற்றில் மக்களால் தொடர்ந்து ஓரங்கட்டப்படும். எனவே, வெற்று பெருமைகளை பேசுவதை நிறுத்திவிட்டு, மக்களின் கோபத்திற்கான காரணங்களை கண்டறிந்து, அவற்றுக்கு நேர்மையான முறையில் தீர்வுகாண முன்வருவதே திமுகவிற்கு தற்போதுள்ள ஒரே வழியாகும். அப்போதுதான் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை தழைக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
