பாஜக எதிர்ப்பு கோஷம் என்ற யுத்தியை பயன்படுத்தி, 2019, 2021, 2024 ஆகிய மூன்று தேர்தலிலும் திமுக வெற்றியை அறுவடை செய்தது. ஆனால் 2026 இல், “பாஜக எதிர்ப்பு கோஷம்” என்பது பலிக்காது என்றும், அதற்குப் முழுக் காரணம் திமுக தான் என்றும், அரசியல் விமர்சகர் நந்தகுமார் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமித்ஷாவின் பார்வை தற்போது தமிழ்நாட்டு பக்கம் திரும்பி விட்டது என்றும், தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்காமல் அவர் விடமாட்டார் என்றும், அதற்காக அவர் எந்த எல்லைக்கும் செல்வார் என்றும், அவர் ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.
“நாமெல்லாம் ஆக்சிஜனைதான் சுவாசிக்கிறோம். ஆனால் பாஜகவின் அமித்ஷா ஆக்சிஜனோடு சேர்ந்து அரசியலிலும் சுவாசிப்பார். அவர் விடும் ஒவ்வொரு மூச்சிலும் அரசியல் இருக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த முறை, “அமித்ஷா தமிழ்நாட்டுக்கு ஸ்கெட்ச் போட்டு விட்டார்; அதிலிருந்து திமுக தப்ப முடியாது” என்றும் அவர் தெரிவித்தார். “பாரதிய ஜனதா எதிர்ப்பை மக்களிடம் பேசும் போது நமக்கு தொடர்ந்து வெற்றி கிடைக்கிறது” என்று திமுக அந்த யுத்தியை கைப்பிடித்தது என்றும், ஆனால் அவர்களுக்கே தெரியவில்லை, பாரதிய ஜனதாவை எதிர்த்து பேச பேச, பாரதிய ஜனதா வளர்ந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
“ரெண்டு சதவீத வாக்குகள் வைத்திருந்த பாஜக, இன்னைக்கு 11% வாக்குகள் வைத்திருக்கிறது என்றால், அதன் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமே திமுக தான்,” என்றும் நந்தகுமார் தெரிவித்தார். ஒவ்வொரு தேர்தலிலும் திமுக, அதிமுகவை மட்டும் விமர்சனம் செய்திருந்தால், இந்த அளவுக்கு பாரதிய ஜனதா வளர்ந்து இருக்காது. பாரதிய ஜனதாவை கடுமையாக விமர்சனம் செய்ததால்தான் அந்தக் கட்சிக்கு இவ்வளவு பெரிய வளர்ச்சி கிடைத்தது என்றார்.
அண்ணாமலையை பொறுத்தவரை, தமிழகத்தில் எந்தக் கட்சியின் உதவியும் இல்லாமல், பாஜக தனித்து செல்வாக்கு பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே அவரது ஐடியா. அவரது கொள்கை நீண்டகால அடிப்படையில் கொண்டது. அதனால் தான், அவரது கொள்கைக்கு 2021, 2024 இல் பாஜக மேலிடம் சம்மதித்தது.
ஆனால், 2026 தேர்தலில் ஆட்சியை மீண்டும் திமுக விடக் கூடாது என்பதற்காகத்தான் பாஜக தற்போது களத்தில் இறங்கியுள்ளது என்றும், அண்ணாமலையும் ஒதுக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.
ஒருபக்கம், பாஜக எதிர்ப்பு கொள்கையை கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் திமுக, இன்னொரு பக்கம் நல்லாட்சியை கொடுத்திருந்தால், அக்கட்சி மேலும் வெற்றியை அறுவடை செய்யும். ஆனால் திமுக அரசு ஏராளமான ஊழலை செய்துள்ளது. பாஜக எதிர்ப்பை விட தற்போது மக்கள் மத்தியில் ஊழல் தான் பெரிய விஷயமாக இருக்கிறது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் செய்து கொண்டு, “பாஜக வந்துவிடும்” என்று பயமுறுத்துவதால், இந்த முறை பாஜக எதிர்ப்பு காரணமாக வெற்றியை அறுவடை செய்ய முடியாது என்றும் கூறப்படுகிறது.
அது மட்டுமன்றி, விலைவாசி உயர்வு, அனைத்து வரிகளும் உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு உள்பட மக்களை வதைக்கும் பல அம்சங்களே, திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படுத்தியுள்ளன. இந்த முறை, இந்த வெறுப்பை வைத்து திமுகவுக்கு எதிரான ஓட்டுகளை அதிமுக மற்றும் பாஜக அறுவடை செய்யும் என்றும் கூறப்படுகிறது. எனவே, அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மொத்தத்தில், 2026 தேர்தல் என்பது திமுகவுக்கு மற்ற தேர்தல்களில் கிடைத்த வெற்றிபோல் எளிதாக கிடைக்காது. இது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இதில் விஜய்யின் பங்கும் திமுகவுக்கு எதிராக இருப்பதால், திமுக எதிர்க்கட்சியாக கூட வர முடியாமல் போனால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்றும் அரசியல் வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.