மன அமைதிக்கும் உடல் நலத்திற்கும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறிய நிலையில், தற்போது இளைய தலைமுறையினர் மன அமைதிக்காக டிஜிட்டல் விரதம் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் தற்போது டிஜிட்டல் விரதம் குறித்த செய்திகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. டிஜிட்டல் விரதம் என்பது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை கையாளாமல் இருப்பதாகும். சமூக ஊடகங்களை தவிர்த்து, கவனச் சிதைகளை குறைக்கவும், மொபைல், கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களில் நேரத்தை கட்டுப்படுத்துவதும், நோட்டிபிகேஷன் அனைத்தும் அணைத்து, மனதை ஒருமுகப்படுத்தி வைப்பதும் தான் “டிஜிட்டல் விரதம்” என்று கூறப்படுகிறது.
மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர் இல்லாத வீடு, நபர்கள் இல்லை என்ற நிலையில், இன்டர்நெட் பயன்பாடு காரணமாக 24 மணி நேரமும் அதில் பிசியாக இருக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைய தலைமுறை, இதில் அடிமையாகி விட்டதாகவே கூறப்படுகிறது.
இதற்காகத்தான், வாரத்திற்கு ஒரு நாள் டிஜிட்டல் விரதம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் சில மணி நேரம் ஆவது இருக்க வேண்டும் என்று மனநல மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். தேவையில்லாத சமூக ஊடக பயன்பாடு குறைவதால் தூக்கம் அதிகரிக்கும் என்றும், நேரத்தை வீணாக்காமல் குறிப்பிட்ட செயல்களில் கவனம் செலுத்தலாம் என்றும், அதற்கு இந்த டிஜிட்டல் விரதம் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் தேவை என்றும் கூறப்பட்டு வருகிறது.
வாரத்திற்கு ஒரு நாள், அல்லது மாதத்திற்கு ஒரு நாள் இந்த டிஜிட்டல் விரதத்தை ஒவ்வொருவரும் கடைபிடித்து, ஓய்வுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மனோதத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதிகமாக டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவதால், மனநலம் மட்டுமின்றி உடல்நிலையும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்றும், இதன் காரணமாக தனிமை உணர்வு, தன்னம்பிக்கையின்மை, உலகத்தில் இருந்து துண்டிக்கப்பட்ட உணர்வு, நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து தூர விலகுதல் உள்ளிட்டவை அதிகரிக்கிறது என்றும் கூறுகின்றனர்.
இன்றைய இளைய தலைமுறைகளுக்குத் தான் இந்த பிரச்சனை அதிகமாக இருக்கிறது என்றும், எனவே அமெரிக்கா ஆய்வு ஒன்றின் படி, டிஜிட்டல் விரதம் ஒவ்வொருவருக்கும் அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்னதான் டெக்னாலஜி வளர்ந்தாலும், இயற்கையிலிருந்து விலகி மனிதர்கள் வாழ முடியாது. முழுக்க முழுக்க டிஜிட்டலை நம்பியே ஒரு மனிதன் வாழ்ந்தால், அது இயந்திரத்தனமான வாழ்க்கையாக மாறிவிடும். எனவே, மனிதர்களின் உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த டிஜிட்டல் விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதே மனோதத்துவ நிபுணர்களின் அறிவுரையாக உள்ளது.