ஓட்டல்கள், கல்யாண வீடுகளில் அன்னம் மீதமானால் அது வீணாகக் குப்பைக்குத் தான் போய்ச் சேருகின்றன. அதனால் யாருக்கும் எந்த ஒரு லாபமும் இல்லை. மாறாக உணவு வீணடிக்கப்படுகிறது. எங்கோ ஒரு மூலையில் பசித்தோருக்குக் கிடைக்காமல் போகிறது. உணவை விரயமாக்காமல் அதை தேவைக்கேற்ப வாங்கி சாப்பிட வேண்டும். அதே போல சமைப்பதும் தேவைக்கேற்ப சமைக்க வேண்டும். மீதமானால் முதியோர் இல்லங்கள், அனாதை விடுதிகள், மாற்றுத்திறனாளிகள் விடுதிகளில் கொண்டு போய்க் கொடுக்கலாம். அவர்களாவது சாப்பிட்டுப் பசியாறுவார்கள்.
உணவு மீதமாகி அதைப் பதப்படுத்துகிறேன் என மீண்டும் வீணாக்கிக் கெட்டுப் போன உணவை யாருக்கும் கொடுத்து விடாதீர்கள். அது நல்ல நிலையில் இருக்கும்போதே கொடுக்க வேண்டும். அதுதான் அன்னதானம்.
அதே போல அன்னதானம், கல்யாண வீடுகளில் சாப்பிடும்போது உங்களால் எவ்வளவு முடியுமோ அதை மட்டும் கேட்டு வாங்கி சாப்பிடுங்கள். சாப்பிட முடியாமல் அதிகமாக வாங்கி அதைக் குப்பைத் தொட்டியில் கொண்டு போட்டு வீணாக்கி விடாதீர்கள். அதுவும் அன்னதோஷமாகி விடும். கவனமாக இருங்கள்.
அது சரி. அன்னதோஷம் யாரையெல்லாம் பிடிக்கும்? பெரிய லிஸ்டே இருக்குதே..! கர்ப்பிணிகள் வந்து பசி என்று பிச்சை கேட்கும் போது, அவர்களுக்கு உணவளிக்காமல் விரட்டியவர்களை; பசியால் வாடும் பச்சிளம் பாலகர்களுக்குப் புசிப்பதற்கு எதுவும் கொடுக்காதவர்களை அன்னதோஷம் பீடிக்கும்.
உணவு உட்கொள்ள அமர்ந்தவர்களைக் கோபித்து, உணவைச் சாப்பிடவிடாமல் விரட்டி அடிப்பவர்களை, தான் உண்டது போக ஏராளமான அன்னம் கைவசம் இருந்தும், அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் எறிபவர்களை; அன்னத்தை வீணடிப்பது: பித்ருக்களுக்கு ஒழுங்காகப் பிண்டம் அளிக்காதவர்களை அன்னதோஷம் பீடிக்கும்.
அன்னதோஷம் பீடித்தால் வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் செல்வம் தங்காது; தரித்திரம் ஆட்டிப்படைக்கும். இதற்கு அன்னபூரணி விரதம் இருந்து மேலே சொன்ன செயல்களைச் செய்யாமல், பசியென்று வருவோர்க்கு உணவளித்துவர வீட்டில் செல்வம் தங்கும்.