நாம் இப்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் கும்பிடுறோம். காலில் விழுந்து வணங்குகிறோம். இதைக் கூழைக்கும்பிடாகவும் சிலர் செய்து காரியத்தை சாதிப்பர். அதெல்லாம் அவப்பெயரைப் பெற்றுத் தரும். பொதுவாக யார் யார் காலில் விழுந்து வணங்க வேண்டும்? வணங்குவதில் என்னென்ன முறைகள் உள்ளன? வாங்க பார்க்கலாம்.
அஷ்டாங்கணம்: தெய்வங்களை வழிபடும்போது மட்டுமே மேற்கொள்ளவேண்டும். நம் உடலின் நெற்றி, மூக்கு, தாடை, மார்பு, வயிறு, கை, கால், மூட்டு ஆகிய எட்டுப் பாகங்களும் தரையில் நன்றாகப்படும்படி வணங்கும் முறைக்கு ‘அஷ்டாங்கணம்’ என்று பெயர். பொதுவாக இந்த வணக்கமுறை ஆண்களுக்கானது. ஆண்கள் கோயிலில் கொடிமரத்தை வணங்கும்போதோ, அல்லது இல்லத்தில் இறைவனை வணங்கும்போதோ இப்படி வணங்க வேண்டும். மேலும், 60ம் கல்யாணம், சுமங்கலி பூஜை போன்ற சுபநிகழ்ச்சிகளின்போது மட்டும் மனிதர்களை இந்த முறையில் வணங்கலாம்.
சாஷ்டாங்கம்: உடலின் 6 அங்கங்கள் அதாவது நெற்றி, மூக்கு, தாடை, கைவிரல், கால்விரல், கால்மூட்டு ஆகியவை மட்டும் தரையில் படும்படி வணங்குவது. ஆண், பெண் இருவருக்கும் பொதுவான வணக்க முறை. யோகாசனம் போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளும் போது சூரிய நமஸ்காரத்தை இந்த முறையில்தான் செய்ய வேண்டும்.
பஞ்சாங்கம்: தெய்வங்களை வழிபடுவதற்காக மட்டுமே இதை மேற்கொள்ள வேண்டும். இந்த வணக்க முறை பெண்களுக்கு உரித்தானது. இது பெண்களின் நெற்றி, கைகள், கைமூட்டு, கால்விரல், கால்மூட்டு ஆகிய 5 அங்கங்கள் தரையில்படும்படி முட்டிபோட்டு வணங்கும் முறை. பெண்கள் கோயிலில் கொடிமரத்தை வணங்கும்போது பஞ்சாங்கமாகத்தான் வணங்க வேண்டும்.
சுமங்கலி பூஜை, சஷ்டியப்த பூர்த்தி போன்ற சுபநிகழ்ச்சிகளின்போது மட்டும், மனிதர்களை இப்படி வணங்கலாம்.
நமஸ்காரம்: மனிதர்களை வணங்கும் போது பின்பற்றும் முறை. 2 கைகளையும் ஒன்றாக இணைத்து, மார்பின் அருகிலோ, நெற்றிக்கு நேராகவோ, அல்லது தலைக்கு மேல் உயர்த்தியோ வணங்கும் முறைக்கு ‘நமஸ்காரம்’ என்று பெயர்.
பெரும்பாலும் நமஸ்காரம் அனைவராலும் வைக்கப்படும் ஒரு வணக்க முறை.
மனிதர்கள் மட்டுமின்றி, கோமாதா பூஜையின்போது பசுக்களை நாம் இந்த முறையில் வணங்கலாம். பசுக்கள் மட்டுமின்றி, எந்த ஜீவராசிகளை வணங்கும்போதும் நாம் இந்த முறையையே பின்பற்றலாம். 2 கைகளையும் ஒன்றாக இணைத்து வணங்குவதன் மூலமாக நீயும் நானும் சமமானவன்’ என்ற தத்துவம் வெளிப்படுகிறது.
அபிநந்தனம்: இரு கைகளையும் கூப்பி மார்பின் அருகே வைத்து, தலையைச் சாய்த்து, பணிவோடு வணங்கும் முறை அபிநந்தனம். தெய்வங்களை வழிபடும்போதும், உயர்ந்த மனிதர்களை வழிபடும்போது இந்த வணக்க முறையை மேற்கொள்ள வேண்டும். பணிவாக ஒருவருக்கு மரியாதை செய்ய விரும்பினால், கண்டிப்பாக நாம் அபிநந்தன முறையில்தான் வணங்க வேண்டும்.
சரணஸ்பர்ஷம்: நேரடியாகக் கால்களை மட்டும் தொட்டு வணங்கும் முறை சரணஸ்பர்ஷம். மாதா, பிதா, குரு, தெய்வம், சான்றோர் ஆகியோரை மட்டுமே இப்படி வணங்க வேண்டும். தெய்வங்களின் பாதங்களைத் தொட்டு வணங்குவதென்பது இறைவனின் பாதத்தில் சரணடைதலைக் குறிக்கிறது.
வணங்குதல் என்பது மிக உயர்ந்த குணமே. இருந்தபோதும் தாய், தந்தையர், குரு மற்றும் தெய்வங்களைத் தவிர்த்து மற்றவர்களை காலைத் தொட்டு வணங்குவதோ. அஷ்டாங்கமாகவோ, பஞ்சாங்கமாகவோ காலில் விழுந்து வணங்குவதோ முறையல்ல.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



