தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், சிறுபான்மையின மக்களின் வாக்குகள் யாருக்கு என்ற விவாதம் தற்போதைய நேர்காணல்களில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. பொதுவாக திமுக கூட்டணியின் பக்கம் இருக்கும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய வாக்குகள், இம்முறை விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையாலும், அதிமுகவின் தனித்த போட்டியாலும் சிதற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இந்த சூழலில், சில கிறிஸ்தவப் பேராயர்களும் அமைப்புகளும் திமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் ஒரு திட்டமிட்ட பிம்பத்தை உருவாக்கும் முயற்சி என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மத தலைவர்களின் ஆசீர்வாதம் பெறுவதை அரசியல் ஆதரவாகச் சித்தரிப்பது ஒரு தவறான முன்னுதாரணம் என்றும், இது தேர்தல் களத்தில் ஒருவிதமான போலி பிம்பத்தை உருவாக்கவே பயன்படும் என்றும் அரசியல் விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
கிறிஸ்தவ மத சட்டமான ‘கேனன் லா’ படி, மத தலைவர்கள் மற்றும் குருக்கள் நேரடி அரசியலில் ஈடுபடுவதோ அல்லது குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்களிக்குமாறு விசுவாசிகளை வற்புறுத்துவதோ தடை செய்யப்பட்டுள்ளது. ஆன்மீக பாதையை தேர்ந்தெடுத்தவர்கள் அரசியல் சப்ஜெக்ட்டுகளை பேசுவது அறநெறிக்கு எதிரானது என்று குறிப்பிடும் விமர்சகர்கள், திருச்சபை என்பது ஒரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது தலைவருக்கோ சொந்தமானதல்ல, அது ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கையை உள்ளடக்கியது என்பதை வலியுறுத்துகின்றனர். ஒரு ஃபாதரோ அல்லது பிஷப்போ ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதால் மட்டுமே அந்தத் திருச்சபையைச் சேர்ந்த அனைத்து மக்களின் வாக்குகளும் அந்தப் பக்கம் செல்லும் என்று நினைப்பது மக்களின் தனிப்பட்ட வாக்குரிமையை அவமதிக்கும் செயல் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
தேர்தல் நேரங்களில் வேட்பாளர்கள் மத தலைவர்களைச் சந்தித்து ஆசி பெறுவது என்பது காலம் காலமாக நடக்கும் ஒரு மரபு. ஆனால், இவ்வாறு ஆசி பெறுவதை “ஆதரவு” என்று ஊடகங்களில் விளம்பரப்படுத்துவது வாக்காளர்களை குழப்பும் ஒரு உத்தி என்று ஆரோக்கிய சதீஷ் சாடுகிறார். 2021 தேர்தலிலும், தற்போதைய சூழலிலும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பிஷப்புகளையும் பாஸ்டர்களையும் சந்தித்து வருகின்றனர். பாஜக கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் கூட இத்தகைய சந்திப்புகளை நிகழ்த்தும்போது, அதை தவிர்த்துவிட்டு ஒரு குறிப்பிட்ட கூட்டணிக்கு மட்டுமே ஆதரவு கிடைப்பதாக காட்டுவது ஊடகங்களின் ஒருதலைப்பட்சமான போக்கை காட்டுகிறது. குறிப்பாக, திருச்சி போன்ற பகுதிகளில் தேர்தல் அறிக்கையை மத நூல்களுடன் ஒப்பிட்டு பேசுவது போன்ற செயல்கள் கிறிஸ்தவ மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் கட்சிகள் திருச்சபைகளையும், மத கூட்டங்களையும் தங்களின் பிரச்சார மேடையாக பயன்படுத்துவதை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுப்பப்பட்டுள்ளது. ஒரு மத வழிபாட்டு தலத்தில் பல நூறு மக்களை ஒரே இடத்தில் திரட்ட முடியும் என்பதால், அதை அரசியல் ஆதாயத்திற்காக மிஸ்யூஸ் செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது. குறிப்பாக, தேர்தல் செலவினங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய்களை யூடியூப் விளம்பரங்களுக்கும், சமூக ஊடக பிரச்சாரங்களுக்கும் செலவிடும் கட்சிகள், மத தலைவர்களைத் தங்கள் பக்கம் இழுக்க பண பலத்தை பயன்படுத்துவதாக கூறப்படும் புகார்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இத்தகைய லஞ்ச கலாச்சாரம் புனிதமான திருச்சபைகளுக்குள் நுழைவது கண்டிக்கத்தக்கது என்பது நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.
இறுதியாக, 90 சதவீத மத தலைவர்கள் மற்றும் குருக்கள் இன்னமும் தங்கள் நெறிகளில் உறுதியாக இருந்து அரசியலில் இருந்து தள்ளி நிற்கிறார்கள் என்றாலும், எஞ்சியுள்ள 10 சதவீதத்தினர் செய்யும் தவறுகள் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் அவப்பெயரை தேடித்தருகின்றன. அரசியல் தலைவர்களையும் இறைவனையும் ஒப்பிட்டு பேசுவது போன்ற வரம்பு மீறிய செயல்கள் ஆன்மீகத்தின் புனிதத்தை குலைக்கின்றன. எனவே, மத தலைவர்கள் அரசியலில் இருந்து விலகி இருந்து, மக்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மக்கள் இப்போது மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பதால், இதுபோன்ற போலி பிம்பங்களை உடைத்து அவர்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
