ஒரு திரைப்படத்தை விட அதிர்ச்சிகரமான சம்பவங்கள் டெல்லியில் நடந்துள்ள நிலையில் டெல்லி போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பரோலில் சென்று தலைமறைவான 67 வயதான தேவேந்தர் சர்மாவை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். Dr. Death என்றழைக்கப்படும் இவர், ஒருகாலத்தில் ஆயுர்வேத மருத்துவ கல்வி படித்தவர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, ராஜஸ்தானில் உள்ள ஒரு ஆஸ்ரமத்தில் சாமியாராக வேஷமிட்டு ஒளிந்து வாழ்ந்தார்!
2000-களின் தொடக்கத்தில் இந்தியாவை உலுக்கிய சட்டவிரோத கிட்னி மாற்று அறுவை சிகிச்சை கும்பலில் முக்கிய நபராக இருந்த இவர், பல கொலை வழக்குகளிலும் குற்றவாளியாக இருந்தார். 2023 ஜூனில் பரோல் வழங்கப்பட்டபின் தலைமறைவானார்.
அலிகர், ஜெய்ப்பூர், டெல்லி உள்ளிட்ட இடங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்றது. 6 மாத தேடலுக்குப் பிறகு, டௌசா மாவட்டத்தில் உள்ள ஒரு ஆஸ்ரமத்தில் சாமியாராக இருக்கிறார் என்பதைக் கண்டறிந்து கைது செய்தோம்.” என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒரு ஆயுர்வேத டாக்டர் எப்படி ‘டாக்டர் டெத்’ ஆனார்? என்பது ஒரு த்ரில்லிங்கான கதை. உ.பி. மாநிலத்தை சேர்ந்த சர்மா, 1984ல் BAMS முடித்து ராஜஸ்தானில் க்ளினிக் நடத்தினார்.
1994ல் ஒரு எரிவாயு ஏஜென்சி மோசடியில் ரூ.11 லட்சம் இழந்தார் என தெரிகிறது. இந்த சம்பவம் அவரை குற்றம் செய்ய தூண்டியது. 1995இல் போலி எரிவாயு ஏஜென்சி ஆரம்பித்து பணம் ஈட்ட தொடங்கினார்.
1998–2004 இடையில், 125க்கும் மேற்பட்ட சட்டவிரோத கிட்னி மாற்றுகளை நடத்தினார். பெரும்பாலும் ஏழை, புறக்கணிக்கப்பட்டவர்களை மூளை சலவை செய்து அவர்களது கிட்னியை அவர்களுக்கே தெரியாமல் எடுத்து ஏகப்பட்ட பணம் சம்பாதித்தார்.. ஒவ்வொரு கிட்னி மாற்றத்திற்கும் ரூ.5 முதல் 7 லட்சம் வரை சம்பாதித்தார் என தெரிகிறது.
இந்த பணத்தாலும் திருப்தியடையாத சர்மா மற்றும் அவரது கும்பல், டெல்லி, ஹரியானா, ராஜஸ்தானில் ட்ரக் மற்றும் டாக்சி ஓட்டுநர்களை கடத்தி கொலை செய்தனர். உ.பி.யின் காஸ்கஞ்சில் உள்ள முதலைகள் நிறைந்த பகுதியில் அவர்களது பிணத்தை வீசியதால் முதலைகள் அந்த உடல்களை சாப்பிட்டதால் யாருக்கும் பிணம் கூட கிடைக்கவில்லை.
ஒவ்வொரு திருடப்பட்ட வாகனத்தையும் ரூ.20,000 ரூ.25,000க்கு கறுப்பு சந்தையில் விற்றனர். குறைந்தபட்சம் 21 பேரை கொலை செய்ததாக வழக்குகள் இருந்தும், தான் 50 பேருக்கு மேல் கொலை செய்ததாக அவரே ஒப்புக்கொண்டார்.
பல மாநிலங்களில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். ஒரு டாக்சி ஓட்டுனரை கொன்றதற்காக குர்காவ் நீதிமன்றம் மரண தண்டனையும் விதித்தது.
இந்த நிலையில் தான் 2020ல் 20 நாள் பரோலில் விட்டபின், 7 மாதங்கள் தலைமறைவாக இருந்தார். அதன்பின் பிடிபட்ட நிலையில் 2023 ஜூனிலும், 2 மாத பரோலுக்கு வெளியேறியபின் தலைமறைவானார். இதனை தொடர்ந்து தேடுதல் வலை விரிக்கப்பட்டது.
இந்த நிலையில் மஞ்சள் ஆடையில் சாமியாராக மாறிய சர்மா, டௌசாவின் ஒரு ஆஸ்ரமத்தில் அமைதியான வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் அவரது பழைய தடங்களை கண்டுபிடித்த போலீசார், இரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவரை கைது செய்தனர். இனி அவருக்கு மீண்டும் பரோல் கிடைக்க வாய்ப்பு இல்லை. ஆயுள் முழுவதும் சிறை அல்லது மரண தண்டனை நிச்சயம் என கூறப்படுகிறது.