பங்குனி உத்திரத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. அன்றைய தினம் பல்வேறு கோவில்களில் தீர்த்த யாத்திரை, கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். திருப்புலியூர், சிதம்பரம் போன்ற கோவில்களில் பக்தர்கள் தீர்த்தம் ஆடி சாமிதரிசனம் செய்வார்கள்.
இந்த நாளில் பல்வேறு தெய்வங்களும் காதல் மணம் செய்து கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன. அதனால் பக்தர்களும் இந்த நாளில் நல்ல வரன் கிடைக்கும் பொருட்டு மனமுருக இறைவனை வேண்டி வழிபடுகின்றனர்.
தானம், தர்மம் செய்வதற்கு மிகவும் உகந்த நாள். இப்படி செய்வதால் பாவங்கள் விலகும். பல நற்பேறுகள் கிடைக்கும் என்பது ஐதீகம். அன்றைய தினம் சாஸ்தா கோவில்களில் சென்று இறைவனை வழிபடுவதன் மூலம் குடும்பப் பிரச்சனைகள், திருமணத்தடை விலகும். நேர்மறையான சிந்தனைகள் மேலோங்கும். வாழ்வில் நல்ல பல மாற்றங்கள் உண்டாகும்.
அன்றைய தினம் பக்தர்கள் கோவிலுக்கு தங்களால் முடிந்த அபிஷேகப் பொருள்கள் மற்றும் அன்னதானத்துக்கு உண்டான பொருள்களை வாங்கிக் கொடுக்கலாம். முருகன் மற்றும் சிவன் கோவில்களில் திருக்கல்யாணம், அபிஷேகம், தீபாராதனை போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். எங்கு பார்த்தாலும் பக்தர்களின் வெள்ளத்தைக் காணலாம். இந்த ஆண்டு வரும் 11ம் தேதி பங்குனி உத்திரம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சில கோவில்களில் பங்குனி உத்தரத்துக்கு 2 நாள்களுக்கு முன்பே சிறப்பு பூஜைகள், யாகசாலை பூஜைகள் நடைபெறுவதுண்டு. தொலைவில் இருந்து வரும் பக்தர்கள் 2 தினங்களுக்கு முன்பே கோவிலில் வந்து தங்கி வழிபட்டுச் செல்வது வழக்கம். தங்கள் சாஸ்தா மற்றும் குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வழிபட்டதும் பக்தர்கள் திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம்.