பங்குனி உத்திரத்தில் வழிபடுவதால் இத்தனை பலன்களா?

பங்குனி மாதம் வரும் பௌர்ணமியில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. வரும் 11ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பங்குனி உத்திரம் வருகிறது. வரும் 10ம் தேதி பிற்பகல் 12 மணி 24 நிமிடத்துக்கு உத்திர நட்சத்திரம்…

panguni uthiram

பங்குனி மாதம் வரும் பௌர்ணமியில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. வரும் 11ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பங்குனி உத்திரம் வருகிறது. வரும் 10ம் தேதி பிற்பகல் 12 மணி 24 நிமிடத்துக்கு உத்திர நட்சத்திரம் வருகிறது. மறுநாள் பிற்பகல் 3 மணி 10 நிமிடத்திற்கு முடிகிறது.

பங்குனி உத்திரத்தன்று பக்தர்கள் கூட்டம் கூட்டமாகத் தங்கள் சாஸ்தா கோவிலுக்குச் செல்வார்கள். எங்கிருந்தாலும் அன்றைய தினம் மட்டும் அங்கு ஒற்றுமையுடன் கூடி விடுவார்கள். கோவிலில் சாமி சிலைகளுக்கு அபிஷேகம், நைவேத்தியம் நடக்கும். அப்போது பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பழங்கள் என தங்களால் முடிந்த அபிஷேகப் பொருள்களை வாங்கிக் கொடுப்பார்கள்.

இந்த நன்னாளில் பக்தர்கள் விரதம் இருந்தும், நேர்த்திக் கடன்கள் செய்தும் தங்கள் வழிபாட்டைப் பூர்த்தி செய்வர். முருகன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் காவடி எடுப்பது, அலகு குத்துவது, பாதயாத்திரை என செல்வதை நாம் பார்க்கலாம். தெய்வீக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான திருவிழாவாக பங்குனி உத்திரம் விளங்குகிறது. சிவன் கோவில்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்தநாளின் சிறப்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

சிவபெருமானின் அறிவுரைப்படி முருகன், தெய்வானையை மணம் முடித்தது இந்த நாளில்தான். ராமர், சீதாவை திருமணம் செய்ததும் இந்த நாளில்தான். சிவன், பார்வதியை திருமணம் செய்ததும் இந்த நாளில்தான்.

பக்தர்கள் இந்த நாளில் நம்பிக்கையுடன் வணங்குவதால் சாஸ்தா, குலதெய்வம், இஷ்டதெய்வங்களின் பரிபூரண அருள் கிடைக்கும். நல்லிணக்கம், செல்வம், பொருள், ஆரோக்கியம் போன்ற நற்பேறுகளைப் பெறலாம் என்பது பக்தர்களின் ஐதீகம்.