பங்குனி உத்திரம் எப்படி வந்துச்சு….? சுவாரசியமான கதையைப் பார்க்கலாமா…

Published:

பங்குனி உத்திரம் என்றதுமே நம் நினைவுக்கு வருவது குலதெய்வ வழிபாடு தான். தென் மாவட்டங்களில் இது மிகவும் பிரபலம். சாஸ்தா கோவில் என்று சொல்வார்கள். ஒவ்வொருவருக்கும் இந்த சாஸ்தாவானது அவரது பரம்பரை தொட்டு மாறிக் கொண்டே இருக்கும்.

முக்கியமாக ஊர் எல்லையில் தான் சாஸ்தா கோவில் அமைந்திருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை வந்து இந்த குலதெய்வத்தை வழிபடுவதன் மூலம் பரம்பரை பரம்பரையாக அவர்களுக்கு எண்ணற்ற நன்மைகள் உண்டாகின்றன.

Koil pongal
Koil pongal

அவர்களது நிம்மதியான வாழ்க்கைக்கு இந்த குலதெய்வ வழிபாடு பெரிதும் உறுதுணையாக இருக்கின்றன. இதை ஆண்டுதோறும் எவ்வளவு வேலையாக இருந்த போதும் அவற்றை எல்லாம் விட்டு விட்டு லீவு போட்டு தொலைதூரத்தில் இருந்து கோவிலுக்கு வந்து பயபக்தியுடன் கடவுளை வேண்டி அலகு குத்தியும், பொங்கல் வைத்தும் மொட்டை மற்றும் இதர நேர்த்திக் கடன்களை செலுத்தி வருவதைக் காணலாம்.

Sastha koil
Sastha koil

அப்படிப்பட்ட அற்புதமான இந்தப் பங்குனி உத்திர திருநாளுக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. முருகப்பெருமானுக்கு உகந்த நாளும் இதுவே. அதைப் பற்றியும் பங்குனி உத்திரம் தோன்றிய சுவாரசியமான கதையைப் பற்றியும் இப்போது பார்ப்போம்.

தமிழ் மாதங்களில் 12வது மாதம் பௌர்ணமி. நட்சத்திரங்களில் 12வதாக வருவது உத்திரம். இந்த நட்சத்திரமானது பங்குனி மாதத்தில் வரும் நன்னாளே பங்குனி உத்திரமாகக் கொண்டாடுகிறோம்.

சூரபத்மன் என்ற ஆணவம். சிங்கமுகன் என்னும் கன்மம். தாருகாசுரன் என்ற மாயை. இந்த முக்குணங்களால் ஏற்படும் தீமையை ஒழிக்கவே ஞானம் எனும் முருகப்பெருமான் தோன்றி அவர்களுடன் போரிட்டு வென்றார். தேவர் குலம் காத்து பங்குனி உத்திரம் நன்னாளில் தெய்வாணையை மணமுடித்தார் முருகப்பெருமான்.

இந்த நாளில் தான் அசுர குலத்தை அடக்க முருகப்பெருமான் தன் தாய், தந்தையரை வணங்கி தன் அசுரவதைப் பயணத்தைத் தொடங்கினார். அப்போது வழியில் ஒரு சிறிய மலை முருகனின் பயணத்தை வழி மறைக்கும் விதமாகப் பெரிதாக வளர ஆரம்பித்தது. இச்செயலினைக் கண்டு முருகப்பெருமான் நாரதரிடம் கேட்டார்.

பிரபஞ்சன் என்ற அசுரன் அகத்தியரின் சாபத்தால் இங்கு வருவோரைத் துன்புறுத்தி வருகின்றான். அதோடு மட்டுமல்லாமல் தாரகாசுரன் நகரான மாயாவதியையும் காத்து வருகின்றான் என்றார் நாரதர்.

இதனைக் கேட்டதும் சினம் கொண்ட முருகப்பெருமான், தனது படைத்தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்துக் கொண்டு போய் தாரகாசுரனை அழித்து வரும்படி கூறினார். இதை அறிந்த தாராகாசுரன் மலைக்கு உதவி புரிய தானும் படையுடன் வந்தான். வீரபாகுவின் தலைமையில் முருகப்பெருமானின் படைகள் தாரகாசூரனுடன் கடும் போர் புரிந்தனர். இரு பக்கத்திலும் வீரர்கள் இறந்து விழுந்தனர்.

போர்க்களத்தில் யுத்தம் செய்த தாரகாசூரன் தன் கதாயுதத்தால் முருகப்பெருமான் படையில் உள்ள வீரகேசரியைக் கொன்றான். இதைக் கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து தாரகாசுரனைக் கடுமையாகத் தாக்கினான். இதனால் கோபம் கொண்ட தாரகாசுரன் திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்தி சாய்த்தான். மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு மீண்டும் மூர்க்கத்தனமாகத் தாக்கினான்.

எதிர்த்தாக்குதல் நடத்த முடியாமல் தன் மாயவேலைகள் மூலம் எலியாக மாறி பிரபஞ்சன் மலைக்குள் சென்றான். வீரபாகுவும், அவனது வீரர்களும் விடாமல் மலையைத் துரத்த மலை தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது. தாரகாசுரனின் அசுரப் படைகள் முருகப் படைகளை பெருமளவில் தாக்கி அழித்தன. இதை நாரதர் மூலமாக அறிந்த முருகப்பெருமான் யுத்தகளத்திற்கே நேரடியாக வந்தார்.

வந்தவர் யார் எனத் தெரியாத தாரகாசுரன் சிறுவனே விலகிப் போ என கிண்டல் செய்தான். கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனைக் கடுமையாகத் தாக்க ஆரம்பித்தார். தாக்குதலை சமாளிக்க முடியாமல் மீண்டும் எலியாக மாறி மலைக்குள் சென்று மாய வேலைகளைக் காட்ட ஆரம்பித்தான். இனியும் அவனை விட்டு வைக்கக்கூடாது என்றெண்ணிய முருகப்பெருமான் தன் அன்னைக் கொடுத்த சக்திவேலை ஏவினார். அது துள்ளி வந்து மலையைக் கூறுகளாக உடைத்தெறிந்து எலியாக இருந்த தாரகாசுரனைக் கொன்றது.

தனது தமையன் தாரகாசுரன் முருகப்பெருமானால் வதம் செய்யப்பட்டதை அறிந்தான் சூரபத்மன். உடனே முருகப்பெருமானுடன் போர் புரியத் தொடங்கினான். அப்போரில் சூரபத்மனை வதம் செய்தார். தனது வஜ்ரவேலால் அசுரர்களுடன் வதம் புரிந்து தேவர்களைக் காத்து தேவபுரியை மீட்டார். இதனால் தேவர்கள் அகம் மகிழ்ந்தனர்.

Panguni Uthiram2
Panguni Uthiram2

இதனால் மனம் மகிழ்ந்த தேவர் குல தலைவன் தனது புதல்வியான தெய்வாணையை திருப்பரங்குன்றத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் மற்றும் சந்திரர், சூரியர்கள் சாட்சியோடும், மும்மூர்த்திகளின் ஆசியோடும் முருகப்பெருமானுக்கு மணமுடித்து வைத்த நன்னாளே பங்குனி உத்திர திருநாள்.

இந்தக் கதையைக் கந்தபுராணம் மற்றும் காளிதாசரின் குமாரபுராணத்தில் காணலாம். இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருநாள் 05.04.2023 (புதன் கிழமை) வருகிறது.

 

மேலும் உங்களுக்காக...