வருகிற ஜூன் 8ம் தேதி முருகப்பெருமானின் பிறந்தநாள் வைகாசி விசாகம் வருகிறது. திருச்செந்தூர் உள்பட அறுபடை வீடுகளில் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். அதையொட்டி முருகப்பெருமானின் மகிமைகளில் ஒன்றான பழனி மலை முருகனின் சிறப்புகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
நம்மவர்கள் எதையும் நுனிப்புல் மேய்கிற கதையாகத்தான் பார்க்கிறார்கள். ஆண்டிக்கோலத்தில் முருகனைத் தரிசித்தால் நாமும் ஆண்டியாகி விடுவோமோ என்று பயப்படுகிறார்கள். அதனால் ராஜ அலங்காரத்தையே விரும்புகின்றனர். ஆனால் இதற்குள் ஒளிந்திருக்கும் தத்துவத்தைப் பார்ப்பதில்லை. என்னன்னு பாருங்க.
ஜோதிடத்தின்படி பார்க்கும் போது செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியாக முருகன் வருகிறார். அதிலும் இந்த பழனி முருகன் கொஞ்சம் ஞானக்காரகனாக இருக்கிறார். வீரம், தைரியம் இதற்கெல்லாம் உரியவர் செவ்வாய். இந்த வீரமும், தைரியமும் இருந்ததால்தான் எல்லோரையும், எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு முருகனால் பழநிக்கு வர முடிந்தது.
ஆனால் முருகன் பழநிக்கு வந்து நின்ற உடனேயே அங்கு குருகிரகமும் முருகனுடன் வந்து விடுகிறார். எனவே முருகன் செவ்வாயாக வீரவேசத்துடன் கிளம்பி ஞான குருவாக இங்கு நிற்கிறார்.இந்த மலையில் வந்து நின்ற முருகப்பெருமானை தமிழ்மூதாட்டி ஔவையார் “ஞானப் பழம் நீ”என அழைத்த்தால், “பழம் நீ” என வழங்கப்பெற்று, பின்னர் அதுவே “பழனி” ஆகிவிட்டது.
ஒரு ஞானப்பழத்துக்காக கோபித்துக்கொண்டு வந்த முருகப்பெருமான் பழனி மலையில்தான் தங்கினார்.எந்த பற்றும் அற்ற ஆண்டி கோலத்தில் காணப்பட்டார். மகனின் நிலையறிந்த சிவனும், பார்வதியும் இந்த பழனி மலைக்கு வந்தனர். முருகப்பெருமானை சமரசம் செய்தவர்கள், அவருக்கு, “பழம் நீ” என்று சூட்டிய பெயரே நாளடைவில் மருவி “பழனி” என்றழக்கப்பட்டது என இக்கோயில் தல வரலாறு கூறுகிறது.
மலையில் நின்ற இவர் கையில் தண்டம் வைத்திருந்த தால்,”தண்டாயுத பாணி’ என்று பெயர் பெற்றார். தண்டம்’ என்றால் “கோல்’ அல்லது “அபராதம்’ என்ற இருவகைப் பொருள்களைக் கொண்டது..”இவ்வுலக வாழ்வு நிலையற்றது’ என்னும் ஞானபாடத்தை கற்பிக்கும் ஆசிரியராக முருகன் இத்தலத்தில்அருளுகிறார்.
பொதுவாக ஆசிரியரின் கையில் கோல்(பிரம்பு) இருக்கும். அதைக் கொண்டு மாணவர்களை பயமுறுத்தி, ஒழுக்கமாக இருக்க ஆசிரியர் திருப்புவார். பழநியில் உள்ள முருகன் என்ற ஞானஆசிரியனும், தன் கையிலுள்ள தண்டம் என்ற கோலால், உலக இன்பங்களான மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மாயைகளில் மூழ்கித் தவிக்கும் மக்களை ஆசைகளைத் துறந்து, தன்னைப் போல் ஆண்டிகோலத்திற்கு வரும்படி அழைக்கிறார்.
இதை ஏற்க மறுப்பவர்களுக்கு “சோதனைகள்’என்னும் அபராதம் விதிக்கிறார். அச்சோதனைகளை தாங்க முடியாதவர்கள், அவரது வழிக்கே சென்று விடுகின்றனர்.