மதுரையில் தாய் மீனாட்சி கிளி வைத்திருப்பதைப் போல, பழநி மலையில் முருகன் கையிலுள்ள தண்டத்திலும் ஒரு கிளி இருக்கிறது. முருகனின் அருள்பெற்ற அருணகிரியார் மீது பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்னும் புலவன் அவரை பழிவாங்க நினைத்தான்.
ஒருசமயம் அவன் வஞ்சனையால் பிரபுடதேவராயன் என்னும் மன்னன் மூலமாக, அருணகிரிநாதரை பாரிஜாதமலர் பறித்துவரும்படி கட்டளையிட செய்தான். அருணகிரியார், தன் உயிரை ஒரு கிளியின் உடலில் செலுத்தி, உடலை
திருவண்ணாமலை கோபுரத்தில் கிடத்திவிட்டு தேவலோகம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வந்தார்.
இதனிடையே சம்பந்தாண்டான் அவரதுஉடலை எரித்து சாம்பலாக செய்துவிட்டான். கிளி வடிவில் திரும்பிய அருணகிரியார் தன் உடல் காணாமல் போனதால் திகைத்தார். முருகன் அவருக்கு அருள் செய்து தன் தண்டத்தில்
அமர்த்திக் கொண்டார். இந்த அமைப்பில்,பழநி முருகனின் தண்டத்தில் கிளி வடிவில் அருணகிரியார் காட்சி தருகிறார்.
பழனி என்பது இங்குள்ள மலையின் பெயராகும். இந்த பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி என்ற தலத்தையும் உள்ளடக்கிய நகரமே பழனி என்ற அழைக்கப்படுகிறது. முருகன் முதலில் கோபித்து வந்து நின்ற தலம் என்பதால், மலை அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி தலமே “மூன்றாம் படை வீடு’ ஆகும்.
இந்த திருஆவினன்குடி தலத்தில் முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். இங்கு முருகன் குழந்தை வடிவமாக இருப்பதால் இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. இந்த திருஆவினன்குடி தலத்தில் முருகன் சிவனின் அம்சமாக இருப்பதால் இவரது கருவறை சுற்றுச்சுவரில் (கோஷ்டம்) தெட்சிணாமூர்த்தி, பிரகாரத்தில் பைரவர்,சண்டிகேஸ்வரரும் இருக்கின்றனர்.

பழநிக்கு செல்பவர்கள் முதலில் இந்த திருஆவினன்குடி தலத்திலிருந்து சுமார் 4 கி.மீ.,தூரத்திலுள்ள பெரியாவுடையாரையும், பெரியநாயகியையும் தரிசித்துவிட்டு, பின்பு பழநி மலையடிவாரத்தில் இருக்கும் திருவாவினன்குடி குழந்தை வேலாயுதரை வணங்க வேண்டும்.
மலைக்கோயில் அடிவாரத்தில் “பாதவிநாயகர்’ இருக்கிறார்.பழநி மலையேறும் முன்பாக இவரை வணங்கிச்செல்ல வேண்டும்.இந்த பாத விநாயகருக்கு பின்புறத்தில் முருகனின் பாதம் இருக்கிறது.மலைக்கோயில் செல்லும் வழியில், இடும்பன் சன்னதி அருகில் சர்ப்பத்தின் மீது தன் வலது காலை வைத்துள்ள நிலையில் “சர்ப்பவிநாயகர்’ என்ற பெயரில் விநாயகர் காட்சி தருகின்றார். “பாதவிநாயகர்”, சர்ப்பவிநாயகர்” இவ்விருவிநாயகர்களையும் இங்கு தரிசனம் செய்வது விசேஷம்.
இதன்பின்பே மலைக்கோயிலில் உள்ள ஞானதண்டாயுதபாணியாகிய முருகனை வணங்க வேண்டும் என்பது ஐதீகம். திருஆவினன்குடியில் உள்ள குழந்தை வேலாயுதரை, மகாலட்சுமி (திரு), கோமாதா (ஆ), இனன் (சூரியன்), கு (பூமாதேவி), அக்னி (டி) ஆகியோர் வழிபட்டதால் இத்தலம், “திருஆவினன்குடி’
என்று பெயர் பெற்றது. இவர்களுக்கு திருஆவினன்குடி கோயில்பிரகாரத்தில் சிலைகள் இருக்கிறது.
அருணகிரியார் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதரை வணங்கி,திருப்புகழ் பாடியதால் அருணகிரியாருக்கு முருகன் காட்சி தந்ததோடு, ஜபமாலையும் கொடுத்தார்.