இந்தியா-பாகிஸ்தான் மோதல் ஏற்பட்ட அடுத்த நாளே, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது என்பதும், இதனால் பாகிஸ்தானின் விவசாயம் மற்றும் குடிநீர் பற்றாக்குறை பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து, பாகிஸ்தான் தண்ணீருக்காக திண்டாடி வருகிறது; சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.
ஒரு பக்கம், இந்தியா சிந்து நதிநீர் தண்ணீரை நிறுத்திய நிலையில், இன்னொரு பக்கம் ஆப்கானிஸ்தான் தங்கள் நாட்டிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுத்து நிறுத்தி அணை கட்ட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதிரடியாக சீனா தங்கள் நாட்டிலிருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் தர உதவி செய்வோம் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன நிதி உதவியுடன் பாகிஸ்தானில் ஹைட்ரோ பவர் நீர்த்திட்டம் ஒன்று கட்டப்பட இருக்கிறது; இதற்கு முழுக்க முழுக்க சீனா தொழில்நுட்ப உதவியும் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. இது, பாகிஸ்தானுக்கு சீனா உதவுகிறது என்பதை காட்டிலும், இந்தியாவை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காக செய்யும் திட்டமாக கருதப்படுகிறது.
மேலும், சீனாவின் ஊடகங்களும் இந்தியா மீது தொடர்ந்து எதிர்மறை விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றன. “தண்ணீரை வைத்து அரசியல் செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது” என்றும், “பாகிஸ்தானின் நீர் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை ஐநா எடுக்க வேண்டும்” என்றும் பல ஊடகங்கள் செய்திகளாக வெளியிடுகின்றன.
மேலும், சீனாவால் பாகிஸ்தானில் கட்டப்பட்ட ஒரு அணையை இந்தியா தாக்க முயற்சித்து வருவதாகவும் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது; அதே நேரத்தில் இந்த பொய் பிரச்சாரங்கள் தொடர்ந்து செய்யப்படுவதாகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா தண்ணீரை நிறுத்திவிட்டால், பாகிஸ்தான் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும், சீனா பாகிஸ்தானுக்கு முழு ஆதரவு தரும் என்றும், சீனாவால் கட்டப்பட்ட அணைகள் கண்டிப்பாக பாகிஸ்தான் மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் என்றும் சீன ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
மொத்தத்தில், தண்ணீர் அரசியல் தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவுடன் மறைமுகமாக மோதுவதற்கு பாகிஸ்தானுக்கு அணை கட்டி தருவது போன்ற நாடகத்தை சீனா நடத்தி வருவதாகவும், சீனாவை பாகிஸ்தான் முழுமையாக நம்பினால் கண்டிப்பாக ஏமாற்றம் தான் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
எனவே, இந்தியாவிடம் சரணடைந்து சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த செய்வதே சரியான வழி என்று பாகிஸ்தானில் உள்ள சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதற்கு பாகிஸ்தான் என்ன முடிவு எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.