கோவிலுக்குப் போவது முதல் அங்கு சாமிகும்பிடுவது, திரும்ப வருவது வரை ஒவ்வொரு செயலுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. ஆனால் பலரும் சும்மா ஏனோ தானோவென்று தங்களுக்குத் தெரிந்த வரை சாமியைக் கும்பிட்டா போதும்னு கும்பிட்டு விட்டு வந்து விடுகின்றனர். தேங்காய் உடைப்பதில் கூட பல விஷயங்கள் உள்ளன. வாங்க என்னன்னு பார்க்கலாம்.
நாம் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிப்பதற்கு தேங்காய், பூ, பழம், முதலானவற்றைக் கொண்டு செல்வது வழக்கம். அவ்வாறு சாமிக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும்போது தேங்காயை குடுமியுடன் பயன்படுத்த வேண்டுமா அல்லது குடுமியை அகற்றிவிட வேண்டுமா என்ற சந்தேகம் பலரிடமும் இருக்கும்.
ஆனால் இதை யாரிடம் கேட்டுத் தெளிவு பெறுவது என்று என பலருக்கும் தெரிவதில்லை. நம் முன்னோர்கள் செய்தார்கள் நாமும் செய்வோம் என்று தான் பலரும் செய்கின்றனர். தேங்காயை குடுமியுடன் பயன்படுத்துவதற்கு ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் காரணம் உண்டு.
பண்டைய காலங்களில் அரசர்கள், வணிகர்கள் மற்றும் வேதம் ஓதுபவர்கள் ஆகியோர் பரம்பரை பரம்பரையாக குடுமி வைத்துக் கொண்டிருந்தனர். அப்போதெல்லாம் குடுமியானது உடலின் ஒரு அங்கமாகவே பார்க்கப்பட்டது.
அதுபோல தேங்காயின் ஒரு உறுப்பாக வருவதுதான் குடுமி. அதை அகற்றி விட்டால் தேங்காய் ஊனமாகிவிடும். அதாவது இறைவனுக்கு படைக்கப்படும் பொருள் எதுவாக இருந்தாலும் அது ஊனம் அற்றதாக இருக்க வேண்டும்.
எனவே சாமிக்கு உடைக்கும் தேங்காயில் குடுமி இருப்பது அவசியம். ஆனால் இன்று இது தெரியாமல் பலரும் குடுமியைப் பிய்த்துக் கொடுக்கின்றனர்.