தேவைப்பட்டால், வருமான வரி செலுத்துவோரின் இமெயில் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களை சோதனை செய்ய வருமான வரி அதிகாரிகளுக்கு உரிமை உண்டு என்ற மசோதா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, பல்வேறு தகவல்கள் வெளியாகி மேலும் பரபரப்பை உருவாக்கி உள்ளன.
இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர். பழைய வருமான வரி சட்டத்தில், தற்போதைய காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு, மத்திய அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அவற்றில் ஒன்றாக, வருமானவரி தாக்கல் செய்பவர்களின் தனிப்பட்ட தகவல்களான இமெயில் உள்ளிட்ட அனைத்தையும் சோதனை செய்ய வருமான வரித்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, சமூக வலைதள கணக்குகள், இமெயில், வாட்ஸ் அப் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சோதனை செய்யும் அதிகாரத்தை இந்த புதிய மசோதா வழங்குகிறது. இது வரி செலுத்துவோரின் தனிப்பட்ட உரிமையை மீறும் செயல் என்று காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. வருமான வரி செலுத்துவோர் அனைவரின் சமூக வலைதளங்கள் மற்றும் தனிப்பட்ட டிஜிட்டல் தளங்களை வருமானவரி சோதனை செய்யாது. வருமான வரி சோதனைக்கு உட்பட்டவர்கள் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என்றால் மட்டுமே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதுவும், மிகப்பெரிய அளவிலான சோதனை நடைபெறும் போது மட்டுமே, டிஜிட்டல் தகவல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். எனவே, சாதாரண வருமான வரி செலுத்துவோர் இந்த மசோதா குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. மேலும், வருமான வரி அலுவலகம், வரி செலுத்துவோரின் தனிப்பட்ட டிஜிட்டல் உரிமைகளை எப்போதும் தவறாக பயன்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளது.