குலதெய்வ கோவிலில் சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைப்பது ஏன்? யாராவது யோசிச்சீங்களா?

குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்யும் பொழுது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்து, பூஜை செய்ய வேண்டும் என்ற பழக்கம் புழக்கத்தில் உள்ளது. ஏன் சர்க்கரை பொங்கலை நைவேத்தியம் படைக்கிறோம்? வேறு ஏதாவது கூட படைக்கலாமே?…

குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்யும் பொழுது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்து, பூஜை செய்ய வேண்டும் என்ற பழக்கம் புழக்கத்தில் உள்ளது.

ஏன் சர்க்கரை பொங்கலை நைவேத்தியம் படைக்கிறோம்? வேறு ஏதாவது கூட படைக்கலாமே? குறிப்பாக சர்க்கரை பொங்கல், குலதெய்வத்திற்கு படைப்பது ஏன்? வாங்க என்ன விவரம்னு பார்க்கலாம்.

நம் ஒவ்வொருவரின் ஜனன ஜாதகத்தின் படி, 12 ராசிகள் அமைய பெற்றுள்ளன. ஒவ்வொரு ராசிகளும், ஒவ்வொரு விதமான பலன்களை கொடுக்கக்கூடியது. 12 கட்டங்களில் ஐந்தாவது இடத்தில் இருக்கக்கூடியது பூர்வ புண்ணிய கர்ம பலன்கள். இந்த ஐந்தாம் இடம் ரொம்பவும் முக்கியமானது. புத்திர பாக்கியம், அறிவுத்திறன், கல்வித்திறன் என்று நம் வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களை தீர்மானிப்பது இந்த ஐந்தாம் இடம் தான்.

இந்த ஐந்தாம் இடத்தில் தீர்க்கமாக சம்மணம் போட்டு உள்ளவர் சனி பகவான். அதே இடத்தில் தான் குலதெய்வம் இருக்கிறது. ஐந்தாம் எண்ணுக்கு உரிய சனி பகவான் நியாயத்திற்கும், நேர்மைக்கும் கட்டுப்பட்டவர்.

இந்த உலகில் யாரை வேண்டுமானாலும், நீங்கள் ஏமாற்றி விடலாம் ஆனால் சனி பகவானை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. செய்த பாவத்திற்கும், புண்ணியத்திற்கும் உண்டான பலன்களை அவர் சரியாக கணக்குப் போட்டு கொடுத்து விடுகிறார்.

அப்படிப்பட்ட சனி பகவானுக்கு உரிய ஐந்தாம் இடத்தில் பூர்வ புண்ணிய பலன்கள் அமைய பெற்றுள்ளதால், நம் கர்ம பலன்களால் உண்டாகக்கூடிய பிரச்சனைகளில் இருந்து நம்மை விடுவிக்க குலதெய்வ அருள் தேவை. குலதெய்வ அருள் இல்லை என்றால், பல துன்பங்கள் நம்மை துரத்திக் கொண்டே இருக்கும்.

எந்த தெய்வத்தை நிந்தித்தாலும், குலதெய்வத்தை நிந்திக்க கூடாது. நம் நலன் மீது முழு அக்கறையும், பாதுகாப்பும் கொண்டுள்ள குல தெய்வத்தை வழிபட மறக்க கூடாது. அறுசுவைகளில் ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய சுவை ஒன்று உண்டு. அந்த வகையில் சனிபகவானுக்கு உரிய சுவை கசப்பு.

கசப்பு என்னும் இந்த சுவையை, அதற்கு எதிராக இருக்கக்கூடிய இனிப்பு என்னும் சுவையை கொண்டு தான் கையாள வேண்டும். அதனால் தான் குலதெய்வத்திற்கு இனிப்பான சர்க்கரை பொங்கலை தயார் செய்து படைத்து, வருடா வருடம் கர்ம பலன்கள் தீர பிரார்த்தனை செய்து கொண்டு வருகிறோம்.

நாம் செய்த பாவங்கள் அத்தனையும் நம்மை மட்டும் அல்லாமல், நம் குலத்தையும் பாதிக்கும். நாம் செய்த பாவத்திற்கு, ஏதுமறியா நம் பிள்ளைகள் பாதிக்க கூடாது என்றால், குலதெய்வத்திற்கு கண்டிப்பாக சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட்டு அவரின் அருளை பெற்று வர வேண்டும் என்பது தான் நம் முன்னோர்களால் தெய்வீக ரகசியமாக சொல்லப்பட்டுள்ளது.