முகலாய பேரரசர் அக்பர் மற்றும் ராஜ்புத் இளவரசி ஜோதா பாய் இடையேயான திருமணம் என்பது முழுமையான கற்பனை என்றும், இது பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களின் தவறான வரலாற்று பதிவு என்றும் ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பாகடே தெரிவித்துள்ளார்.
உதய்ப்பூரில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்வில் பேசிய அவர், அக்பரின் ஆட்சிக்காலத்திலேயே எழுதப்பட்ட அதிகாரப்பூர்வ வரலாற்று நூலான அக்பர்நாமா-வில் ஜோதா மற்றும் அக்பரின் திருமணம் குறித்து எந்தவிதமான குறிப்பும் இல்லை என்றும் வாதிட்டார்.
“ஜோதா மற்றும் அக்பர் திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. அதை பற்றிய படம் ஒன்றும் எடுக்கப்பட்டது. வரலாற்று புத்தகங்களும் அதையே கூறுகின்றன. ஆனால் அது பொய்… ப்ரமால் என்ற ஒரு மன்னர் இருந்தார். அவருடைய ஊழியையின் மகளை அக்பருக்கு திருமணம் செய்து வைத்தார்,” என அவர் கூறினார்.
1562ஆம் ஆண்டு அக்பர், அமேர் மன்னர் ராஜா ப்ரமாலின் மகளை திருமணம் செய்து கொண்டார். வரலாற்றுப் பதிவுகளில் அந்த மகளின் உண்மையான பெயர் தெளிவாக இல்லை. சிலர் ஹர்கா பாய் அல்லது ஹர்கன் சம்பவதி என்ற பெயர்களை குறிப்பிடுகிறார்கள். இந்த திருமணம் முகலாயர்களும் ராஜ்புத் மன்னர்களும் இடையேயான அரசியல் கூட்டாண்மையாக பல வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் ராஜஸ்தான் ஆளுநர் அந்த கருத்துக்கு எதிராகப் பேசினார்: “பிரிட்டிஷ் நம் வீரர்களின் வரலாற்றை மாற்றி எழுதினர். அவர்கள் சரியாக எழுதவில்லை. ஆனால் அதை நாம் ஏற்றுக் கொண்டோம். பின் சில இந்தியர்கள் வரலாற்றை எழுதினாலும், அந்த வரலாறும் பிரிட்டிஷின் தாக்கத்தில் அமைந்ததே.”
மகாராணா பிரதாப், அக்பருக்கு அமைதி தூது கடிதம் எழுதியதாக வரலாற்றில் வரும் தகவலையும் அவர் முற்றிலும் பொய் என கூறினார். “மகாராணா பிரதாப் அவரது சுயமரியாதையை ஒருபோதும் தாழ்த்தவில்லை. வரலாற்றில் அக்பரை பற்றிதான் அதிகம் சொல்லப்படுகிறது. பிரதாபை பற்றிய தகவல்கள் குறைவாகவே உள்ளது,” என அவர் வலியுறுத்தினார்.
திருமணத்துக்குப் பிறகு ஜோதா பாய் “மரியாம் உஸ-சமானி” என்ற பட்டத்தை பெற்றார். அவர் அக்பரின் வாரிசான ஜஹாங்கீரின் தாயாக இருந்தார். எனவே முகலாய அரசின் மிகவும் பிரபலமான பெண்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்.
ஆனால், சில வரலாற்றாசிரியர்கள் ‘ஜோதா பாய்’ என்ற பெயர் ஜஹாங்கீரின் மனைவி, ஜோத்பூரை சேர்ந்த ராஜ்புத் இளவரசியுடன் குழப்பப்பட்டதனால் பிற்பாட்டில் வந்த தவறான பெயரிடல் என்றும் கூறுகிறார்கள்.
இந்நிலையில், தற்போதைய தேசியக் கல்விக் கொள்கையின் கீழ் இவ்வாறான “தவறான வரலாற்றுப் பதிவுகளைச் சரிசெய்யும் முயற்சிகள்” நடைபெற்று வருவதாகவும், நம் கலாசாரம் மற்றும் மாபெரும் வரலாற்றை காக்கும் நோக்கத்தில் புதிய தலைமுறையை தயார் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ஆளுநர் ஹரிபாவ் பாகடே குறிப்பிட்டார்.