அடடா…இப்படி எல்லாமா இறைவன் நம்மை ஆட்கொள்வார்..?! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்…!!!

Published:

இறைவனை வணங்க நாம் ஒரு உற்சாகத்துடன் ஆனந்தக் களிப்புடன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். காலையிலேயே எழுப்பி விட்டார்களே என வேண்டா வெறுப்புடன் செல்லக்கூடாது. நம் எண்ணமே நம் வெற்றிக்கு வழிவகுக்கும். இந்த இனிய நாளான மார்கழி 11 (26.12.2022)ல் மாணிக்கவாசகர், ஆண்டாள் அருளிய பாடல்களைப் பற்றிப் பார்ப்போம்.

Markali 11
Markali 11

மொய்யார் தடம் பொய்கை என்று தொடங்குகிறது இன்றைய பாடல். இதில் மாணிக்கவாசகர் ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அய்யா நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டு என்கிறார்.

அய்யா என்பது பொதுவான வார்த்தை. எல்லோரையும் கடவுள் ஒரே மாதிரி ஆட்கொள்ளவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு விதமாக வருகிறார் இறைவன். ஒரு தாய் குழந்தைக்கு தேவை அறிந்து உணவு கொடுக்கிறாள். அது போல தான் இறைவனும்.

சமயக்குரவர்கள் நால்வரில் ஞானசம்பந்தர் முதன்மையானவர். இறைவன் பாலைக் கொடுத்து அவரை ஆட்கொண்டார். அப்பர் பெருமானுக்கு சூலை நோய் தந்து ஆட்கொள்கிறார். அப்பருக்கு கொடுமையான வயிற்றுவலி.

அது எமனைப் போல துன்பப்படுத்தியதாம். அந்த வகையில் இவருக்குத் துன்பத்தைக் கொடுத்து ஆட்கொண்டார் இறைவன். சுந்தரருக்கு ஓலை காட்டி ஆட்கொண்டு அருளினார். மாணிக்கவாசகருக்குக் காலைக் காட்டி ஆட்கொண்டார்.

கால் என்றால் ஞானம் என்று பொருள். திருவடியான அந்தக் குருவடி காட்டி இறைவன் ஆட்கொண்டார். ஆன்மாவுக்கு ஆன்மா வினைப்பயன் மாறுபடுகிறது. தவம் என்பதும் வினைப்பயனும் ஒருவருக்கொருவர் மாறுபடுகிறது. மாணிக்கவாசகரை ஆட்கொள்ளும்போது நேரடியாகக் குருவாகவே வந்து ஆட்கொள்கிறார்.

சில வேளைகளில் சில குருமார்கள் நமக்கும் அமைவதுண்டு. நான் தான் குரு. நான் தான் உனக்கு எல்லாம் சொல்லித் தரணும். நீ இங்கேயே இரு. இங்கேயே படி. நான் உனக்கு எல்லாம் சொல்லித் தருகிறேன் என்பார். விவேகானந்தர் ராமகிருஷ்ண பரமஹம்சருடைய குரு சீடர் உறவு எப்படி அமைந்தது என்று பாருங்கள்.

Vivekanandar 1
Vivekanandar

விவேகானந்தர் கேட்ட கேள்விகளுக்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் பதில் சொல்கிறார். நீ என் மாணவனாக இருந்தே ஆக வேண்டும் என்று தன் பிடியிலேயே அவரை வைத்துக் கொள்கிறார் பரமஹம்சர். ஒரு நல்ல மாணவர் குருவின் பெருமையைப் பறைசாற்றுபவர்.

இந்த அடியார்களும் இறைவனை அப்படியே குருவாக ஏற்றுக் கொள்கின்றனர். இவர்கள் அவரை மாதிரி கஷ்டம் கொடுத்து எனை ஆட்கொள்ளவில்லையே….இன்பம் தந்து ஆட்கொள்ளவில்லையே என யாரும் மாறி மாறிக் கேட்கவில்லை.

அப்பர் பெருமான் கடவுளைப் பார்த்தவுடனே வருத்தப்பட்டார். தனக்கு இப்படி வயிற்றுவலியைக் கொடுத்துவிட்டாயே என ஆதங்கப்பட்டார். கூற்றாயினவாறு விலக்ககழி…என்கிறார். அடுத்த வரியே அவர் கொடுமைகள் பல செய்தனன் நானறியேன்…என்கிறார்.

எமனைப் போல எனக்கு பயங்கரமான வயிற்றுவலியைத் தந்து விட்டாயே…எனக்கு இப்படி தந்து விட்டாயே என்கிறார். அடுத்த வரியில் நான் பல கொடுமைகள் செய்துள்ளேன். அவற்றை நான் அறியவில்லை. அவற்றை எல்லாம் நான் தெரிந்தா செய்துள்ளேன். தெரியாமல் அல்லவா செய்து இருக்கிறேன்.

இனி உன் திருவடியை விட்டு நீங்க மாட்டேன். உன் பக்கத்திலேயே தான் இருப்பேன். உன்னைப் பற்றிப் பாடப் போறேன். உன்னிடம் அடியாராக நான் வாழ்வதற்கு உண்டான தகுதியை எனக்குக் கொடு என்று கேட்டார்.

நீ என்ன ஞானசம்பந்தர் மாதிரி எனை ஆட்கொள்ளாம விட்டாய் என்று சொல்லவில்லை. நமக்கும் மாணிக்கவாசகர் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக நீ ஆட்கொண்டாயே இறைவா…இது சாதாரணமான விளையாட்டா…எப்படி எப்படி எல்லாம் உன் கருணையை இறைவனிடம் காட்டி இருக்கிறாய்…இந்த கருணையை நாமும் பெற வேண்டுமல்லவா என ஒரு தோழி அழைப்பது போல மாணிக்கவாசகர் இறைவனைத் தரிசிக்க நம்மை அழைக்கிறார்.

இந்தப் பாடலில் இறைவனிடம் நீ எந்த ரூபத்தில் வந்தாலும் எனை ஆட்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை நாம் அவரிடத்தில் வேண்டுதலாய் வைக்க வேண்டுமே தவிர வேறு எந்த சிந்தனையும் இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

ஆண்டாள் அருளிய திருப்பாவைப் பாடல் இதோ…

Aandal 11 1
Aandal 11

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து என தொடங்குகிறது இந்தப் பாடல்.

இந்தப்பாடலில் ஆண்டாள் தனது தோழிகளை அழைத்துப் போய் கண்ணனை வணங்க வேண்டும் என்று பாடுகிறார்.

சுற்றத்து தோழிமார் எல்லோரும் வந்து முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட…என்று சொல்லும் போது அவர் நான் மட்டும் போயி கும்பிட்டு விட்டு வரணும் என்று எனக்குத் தெரியும். ஆனால் எல்லாரையும் அழைத்துச் சென்று வழிபட வேண்டும் என்பது தான் அவரது நோக்கம்.

தினமும் வெவ்வேறு தாத்பரியங்களுடன் அவர் நமக்கு இறைவனைப் பற்றி விளக்குகிறார். இன்றைய பாடலில் இப்படி எல்லோரையும் அழைத்துச் சென்று இறைவனை வணங்குவதால் நமக்கு என்ன பலன் என்றும் சொல்கிறார்.

Ramanujar
Ramanujar

இதைப் பற்றி சொல்ல வேண்டுமானால் நாம் ராமானுஜர் காலத்துக்குப் போக வேண்டும். இவர் திருக்கோஷ்டியூரில் வாழ்ந்து வரும்போது அங்குள்ள நம்பியிடம் உபதேசம் பெற செல்வார். தினமும் இவர் நான் ராமானுஜர் வந்து இருக்கிறேன்…என வாசலில் இருந்து சொல்வார். நம்பி உள்ளே இருந்து நான் செத்த பிறகு வா என்பார். இப்படி தினமும் போய் போய் 17 முறை சொல்லியிருக்கிறார்.

18வது முறை அங்கு போய் நிற்கிறார். உள்ளே இருந்து நம்பி…யார் வந்து இருக்கிறார் என்று கேட்கிறார். இப்போது ராமானுஜர் சொல்கிறார் அடியேன் வந்திருக்கிறேன்…என்று. இப்போது அங்கு நான் செத்துப் போய்விட்டது. அதாவது நான் என்கின்ற ஆணவம் செத்துப் போய்விட்டது. நான் என்ற ஆணவம் அழிந்த பிறகு தான் உபதேசம் சொல்லத் தகுதி கிடைக்கும். அப்போது அவர் எம்பெருமானின் நாமத்தை சொல்லி இதை யார் கேட்டாலும் சொல்லாதே…நீ மட்டும் சொல் என்று கூறி அனுப்புகிறார்.

அப்போது ராமானுஜர் இந்த நாமம் நமக்கு மட்டும் தெரிந்தால் பத்தாது. ஊரில் உள்ள எல்லோருக்கும் தெரிய வேண்டும். அனைவரும் நலம் பெற வேண்டும் என்றெண்ணி சௌமிய ராஜ பெருமாள் ஆலயத்திற்குச் செல்கிறார். அங்குள்ள விமானத்தின் உச்சியில் நின்று ஓம் நமோ நாராயணாய நமஹ என்ற நாமத்தை உலகறியச் செய்யும் வண்ணம் உரக்கச் சொல்கிறார் ராமானுஜர்.

இடைவிடாமல் எல்லோரும் இந்த நாமத்தைச் சொல்லுங்கள். எந்தத் துன்பம் வந்தாலும் நம்மை இந்த நாமம் காத்தருளும் என உபதேசம் பண்ணினார். இதைத் தெரிந்து குரு கோபித்துக் கொள்கிறார். அப்போது ராமானுஜர் சொல்கிறார் பாருங்கள். குருநாதா எனக்கு நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை.

இந்த மந்திரத்தை உபதேசமாகக் கேட்பவர்களுக்கு சொர்க்கம் கிடைத்தால்…அதுவே போதும் என்கிறார். அப்போது குரு ஆரத்தழுவி சொல்கிறார். என்னிலும் நீ பெரியவன். உனது பெருந்தன்மை எனக்கு வியக்க வைக்கிறது என ஆசி கூறி…உனக்கு எம்பெருமானின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்கிறார்.

ஜாதி, மத, பேத, இன பாகுபாடின்றி எல்லோருக்கும் இந்த நாமம் தெரியணும். எல்லோரும் நல்லா இருக்கணும் என்ற பரந்த உள்ளம் அவருக்கு இருந்தது. எல்லாரும் அங்கு வந்து இறைவனை வணங்கும்போது அங்கு இறையருள் இரட்டிப்பாக மாறும். நாச்சியாரும் அதனால் தான் எல்லாரையும் பக்தியில் திழைத்து கண்ணனின் அருளைப் பெற அழைக்கிறார்.

 

மேலும் உங்களுக்காக...