கடவுளை வழிபட நைவேத்தியம் வைப்பது பலரது வழக்கம். பொதுவாக சர்க்கரைப் பொங்கல் வைப்பார்கள். சிலர் அந்தத் தெய்வங்களுக்கு ஏற்ற நைவேத்தியம் வைப்பர். எதுவும் முடியாத பட்சத்தில் 2 வாழைப்பழம், வெத்தலைப்பாக்காவது வைக்க வேண்டும். நைவேத்தியம் வைப்பதிலும் பல விஷயங்களை நாம் கடைபிடிக்க வேண்டும். எதைச் செய்வது? செய்யக்கூடாதது எதுன்னு சில விதிமுறைகள் இருக்கு. எதை எல்லாம் பின்பற்றுவதுன்னு பார்க்கலாமா…
வெங்காயம், பூண்டு சேர்த்து செய்யப்பட்ட உணவுகளை ஒரு போதும் கடவுளுக்கு படைக்கக் கூடாது. அசைவ உணவுகளை எப்படி நைவேத்தியமாக படைப்பதை தவிர்க்க வேண்டுமோ அதே போல் காய்கறிகளில் காளான் போன்ற உணவுகளையும் கடவுளுக்கு படைக்கக் கூடாது. சாத்வீகமான உணவுகளை மட்டுமே பூஜையின் போது படைக்க வேண்டும்.
நைவேத்தியம் படைக்கும் போது தனியாக இலை வைத்து அல்லது புதிய பாத்திரங்கள் அல்லது தனியான பாத்திரங்கள் வைத்து அதில் மட்டுமே படைக்க வேண்டும். தினமும் நாம் சாப்பிடுவதற்கு பயன்படுத்தும் பாத்திரங்களை ஒரு போதும் பயன்படுத்தக் கூடாது. அதே போல் பிரசாதத்தை வெறும் தரையில் இலை அல்லது பாத்திரம் வைத்து படைக்கக் கூடாது. ஒரு சிறிய துணி விரித்து அல்லது சிறிய பலகையில் வைத்து படைக்க வேண்டும்.
நைவேத்தியமாக படைக்கும் உணவுப் பொருளில் அனைத்தும் சரியாக இருக்கிறதா என சரிபார்க்க சுவை பார்க்கக் கூடாது. புதிதாக சமைத்து, சுத்தமாக பாத்திரத்தில் வைத்தே நைவேத்தியம் படைக்க வேண்டும். உண்மையான அன்பு மற்றும் பக்தியுடன் நைவேத்தியம் படைக்க வேண்டும்.
கடவுளுக்கு நைவேத்தியமாக படைக்கும் உணவுகளை பூஜை முடிந்ததும் எடுத்து நாமும் பிரசாதமாக சாப்பிட்ட பிறகு, மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும். நைவேத்தியமாக படைத்த உணவுகளை நீண்ட நேரம் அப்படியே வைத்திருக்கக் கூடாது. இதனால் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் உருவாக துவங்கி விடும்.
கடவுளுக்கு நைவேத்தியமாக வைத்த உடனேயே அதை எடுத்து, சாப்பிடுவது அல்லது மற்றவர்களுக்கு கொடுப்பது சிலருக்கு பழக்கமாக இருக்கும். ஆனால் இது தவறானதாகும். நைவேத்தியமாக படைத்த உணவுப் பொருள், கடவுளுக்கு முன் 15 முதல் 30 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
அதே போல், நைவேத்தியம் படைத்த பிறகு கடவுள் அதை சாப்பிடுவதாக நம்பப்படுவதால், ஒரு திரையிட்டு மூடி விட வேண்டும். 30 நிமிடங்களுக்கு பிறகே திரையை விலக்கி, இறைவனை வழிபட்ட பிறகு அந்த உணவை எடுத்து சாப்பிட வேண்டும்.