முதுமை நீக்கி இளமையைக் கொடுத்த ஆழ்வார்…! வேகமெடுத்து வந்த நதியைத் தடுத்த மூலவர்!

Published:

புராண கால வரலாற்றைப் படித்தால் பிரமிப்பாக இருக்கும். இறந்தோருக்கு உயிர் கொடுப்பதும், முதுமையை இளமையாக்குவதும், இளமையை முதுமையாக்குவதும் சாதாரணமான நிகழ்வாக இருக்கும்.

இந்த நிகழ்வை நாம் அனுபவிக்கவில்லை என்றாலும் அதைப் படித்தாவது பார்க்கலாம் அல்லவா..அத்தகைய நிகழ்வுகளில் முதுமையை நீக்கி இளமையைக் கொடுத்த ஆழ்வார் பற்றி இப்போது பார்ப்போம்.

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள, ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 திவ்விய தேசங்களில்  82வது வைணவத் திருத்தலம் திருவெக்கா.

தலபெருமை

Thiruvekka temple
Thiruvekka temple

பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. பொய்கையாழ்வார் இத்தலத்தில் அவதாரம் செய்தார். இங்குள்ள பொய்கையாற்றின் பொற்றாமரையில் அவதாரம் செய்ததால் பொய்கை ஆழ்வார் எனப்பட்டார். எல்லா கோயில்களிலும் பெருமாளின் சயன திருக்கோலம் இடமிருந்து வலமாக இருக்கும்.

ஆனால் திருமழிசை ஆழ்வாருடன் சென்று, மறுபடி வந்து படுத்ததால் இத்தலத்தில் பெருமாள் வலமிருந்து இடமாக சயனித்திருப்பார். சரஸ்வதி தேவி வேகவதி ஆறாக மாறி விரைந்தோடி வரும்போது, அந்த நதியை தடுக்க மூலவரே சயனத்தில் இருப்பதாக கூறுவர். வேகவதி ஆறே வெஃகா என அழைக்கப்படுகிறது.

தல வரலாறு

12 ஆழ்வார்களில் திருமாலின் கையில் உள்ள சக்கரத்தின் அம்சமாக அவதரித்தவர் திருமழிசை ஆழ்வார். இவர் பார்க்கவ மகரிஷியின் மகனாக திருமழிசை என்னும் தலத்தில் அவதரித்தவர். பிரம்பறுக்க வந்த திருவாளன் என்பவர் இவரை எடுத்து வளர்த்தார். ஆனால், ஆழ்வார் பிறந்தது முதல் பால் கூட குடிக்கவில்லை.

இதைக் கேள்விப்பட்ட வேளாளர் ஒருவர் தன் மனைவியுடன் பசும்பாலை காய்ச்சி எடுத்து வந்து குடிக்கக் கொடுத்தார். இதைத்தான் ஆழ்வார் முதன் முதலாக குடித்தார். தொடர்ந்து இவர்கள் கொடுத்த பாலைக் குடித்து வளர்ந்த ஆழ்வார், ஒருநாள் சிறிது பாலை மீதம் வைத்து விட்டார். அந்த பாலை வேளாளர் தன் மனைவியுடன் சாப்பிட்டார்.

உடனே தன் முதுமை போய் இளமை வரப்பெற்றார். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கனிகண்ணன் என்று பெயரிட்டனர். ஆழ்வாருடனேயே வளர்ந்து வந்த கனிகண்ணன் பிற்காலத்தில் அவரது சீடரானார்.

பல சமயங்களிலும் உள்ள குறைபாடுகளை அறிந்த ஆழ்வார் கடைசியில் சைவ சமயத்தை சார்ந்தார். பேயாழ்வார், திருமழிசை ஆழ்வாரை வைணவ சமயத்தை ஏற்க செய்ததுடன், அவருக்கு திருமந்திர உபதேசமும் செய்தார்.

ஒரு முறை காஞ்சிபுரம் வந்த திருமழிசை ஆழ்வார் திருவெக்கா தலத்திற்கு வந்த பெருமாளுக்கு பல ஆண்டுகள் சேவை செய்தார். அங்கு ஆசிரமத்தை சுத்தம் செய்யும் மூதாட்டிக்கு அவர் விருப்பப்படி இளமையை திரும்ப வரும்படி செய்தார்.

இவளது அழகில் மயங்கிய பல்லவ மன்னன் தன் மனைவியாக்கிக் கொண்டான். காலம் சென்றது. மன்னன் வயதில் முதியவன் ஆனான். ஆனால் அவளது மனைவியே என்றும் இளமையுடன் இருந்தாள். இதனால் கவலைப்பட்ட மன்னன் தனக்கும் இளமை வேண்டும் என விரும்பினான்.

எனவே ஆழ்வாரின் சீடரான கனிகண்ணனிடம் தனக்கும் இளமையாகும் வரம் வேண்டும் என வேண்டினான். எல்லோருக்கும் அந்த வரம் தர முடியாது என கனிகண்ணன் கூற, கோபமடைந்த மன்னன் அவனை நாடு கடத்த உத்தரவிட்டான். இதையறிந்த ஆழ்வார், சீடனுடன் தானும் வெளியேற முடிவு செய்தார்.

Thiruvekka
Thiruvekka

இந்த பெருமாளிடம் நாங்கள் இல்லாத இடத்தில் உனக்கும் வேலை இல்லை. எனவே நீயும் எங்களுடன் வந்து விடு என்று கூறினார். பெருமாளும் தன் பாம்பு படுக்கையை சுருட்டிக்கொண்டு ஆழ்வாருடன் சென்றார். இதனால் தான் இந்த பெருமாளுக்கு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்ற திருநாமம் வழங்கப்படுகிறது.

எல்லா கோயில்களிலும் பெருமாளின் சயன திருக்கோலம் இடமிருந்து வலமாக இருக்கும். ஆனால் திருமழிசை ஆழ்வாருடன் சென்று, மறுபடி வந்து படுத்ததால் இத்தலத்தில் பெருமாள் வலமிருந்து இடமாக சயனித்திருப்பார்.

இந்தக் கோவிலில் மூலவர் சொன்ன வண்ணம் செய்த பெருமாள், திருயதோதகாரி, திருவெக்கனை. தாயார் கோமளவல்லி நாச்சியார். பொய்கை தீர்த்தம் உள்ளது. வேதாசார விமானத்தைக் கொண்டது.

மேலும் உங்களுக்காக...