ராம நாமம் உருவானது எப்படி? கலியுகத்தில் மோட்சத்தை அடைய சிவன் கொடுத்த மந்திரம்…!

Published:

படிப்பது என்றாலே செம போர்…இப்போதெல்லாம் கையடக்க அலைபேசி வந்துவிட்டது. அதனால் படிப்பது குறைந்து பார்ப்பது அதிகமாகி விட்டது. அதைப் போல எதைக் கேட்டாலும் விடையளிக்கும் நெட் அனைவரது கைகளிலும் தவழ்கிறது.

இதனால் மந்திரங்கள், ஸ்லோகங்கள் என படிப்பவர்களின் எண்ணிக்கைக் குறைந்து விட்டது. இதனால் என்ன பயன் என்று கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. எதையும் செய்யாமலேயே அவர்கள் பகுத்தறிவுடன் கேட்பது தான் இதில் புதுமை. எதைச் செய்தாலும் முழு ஈடுபாட்டோடு செய்ய வேண்டும்.

சிலர் கடனே என மந்திரம் ஓதுவர். அவர்களுக்கும் எவ்வித பலனும் கிடைக்காது. மனமுவந்து சொல்லும் இறைவனின் மந்திரங்களும், ஸ்லோகங்களும், நாமங்களும் என்றென்றும் நமக்கு நன்மையை அளிக்கின்றன. அவற்றில் ஒன்றான ராம நாமத்தின் மகிமையைப் பற்றியும், அது உருவான விதம் குறித்தும் இப்போது பார்ப்போம்.

ஸ்ரீமத் ராமாயணத்தை ஆதியில் நான்முகனான பிரம்மாதான் இயற்றினார். ஆதியில் ஸ்ரீமத் ராமாயணம் 100 கோடி ஸ்லோகங்களை கொண்டிருந்தது.

இந்த 100 கோடி ஸ்லோகங்களை யார் பொறுமையாக கேட்பார்கள் என்கிற சந்தேகமும் அவரிடம் இருந்தது. இந்த 100 கோடி ஸ்லோகங்களையும் சொல்வோம். கேடபவர்கள் கேட்கட்டும் என்று ஸ்ரீமத் ராமாயண உபந்நியாசத்தை தொடங்கினார்.

Lord Bramma
Lord Bramma

சத்ய லோகத்தில்தான் முதலில் ஸ்ரீமத் ராமாயண உபந்நியாசத்தை பிரம்மா தொடங்கினார். சத்ய லோகவாசிகளோடு வைகுண்டவாசிகளும், கைலாய கணங்களும்
சேர்ந்து ராமாயண அமுதத்தை பருகினர். அப்போதுதான் திடீரென்று எல்லோருக்கும் ஒர் ஆசை தோன்றியது. இந்த 100 கோடி ஸ்லோகங்களையும் நம் லோகத்திலேயே படித்து ஆனந்தமடையலாமே என்று நினைத்தனர்.

பிரம்மா ஆனந்தமடைந்தார். இந்த 100 கோடி ஸ்லோகங்களையும் யாருக்கென்று எவ்வாறு பிரித்து கொடுப்பது என்று கவலை கொண்டார். அப்போது ஸ்ரீமத்ராமாயண அமுதத்தின் சுவை குறையாது பிரித்துக் கொடுக்கிறேன் என சிவபெருமான் முன் வந்தார். எல்லோரும் மகிழ்ந்தார்கள். கோடிகளை 33 கோடிகளாக மூவருக்கும் கொடுத்தார்.

மீதியுள்ள ஒரு கோடியை 33 லட்சங்களாக வகுத்தளித்தார். மிஞ்சிய ஒரு லட்சத்தையும் மூன்றாகப் பிரித்தார். 1000 ஸ்லோகங்கள் நின்றது. அதை 300 ஆக பாகம் செய்ய 100 தங்கியது.

அதையும் பிரித்துக் கொடுங்கள் என்று கோரிக்கை வைக்க 30 ஆக மூவருக்கும் கொடுக்க 10 ஸ்லோகங்கள் மிஞ்சின. அதையும் ஏன் விடவேண்டும் என்று 3 லோக வாசிகளும் பிடிவாதம் செய்ய மூம்மூன்றாக கொடுக்க ஒரேயொரு ஸ்லோகம் பாக்கியிருந்தது.

அந்த ஸ்லோகத்தில் 32 எழுத்துக்கள் இருந்தன. சரி, அவர்கள் கேட்கும் முன்பு தானே கொடுத்து விடுவோம். நம் வேலை அதுதானே என்று பத்து பத்தாக மூவருக்கும் கொடுக்க 2 எழுத்துக்கள் மட்டும் மலர்ந்த பூக்களாக மணம் கமழ்ந்தன.

இதை என்ன செய்வது? யாருக்கென கொடுக்க முடியும்? மூவரும் விட்டுக் கொடுக்க மறுக்கிறார்களே? என்று யோசித்தார். தேவர்கள் ஒன்று சேர்ந்து அந்த இரண்டு எழுத்துக்களுமே பங்கு பிரித்தவருக்கு போய் சேரட்டும் என்று முழுமனதாகக் கொடுத்தார்கள். ஈசனும் ஆனந்தமாக, இதயப் பூர்வமாக, பிரேமையோடு அந்த 2 எழுத்துக்களை எடுத்துக் கொண்டார். அந்த 2 எழுத்துக்களும் எவை தெரியுமா?

அதுதான் ராம எனும் நாமதாரக மந்திரம். ஆஹா… ஒட்டுமொத்த ராமாயணத்தின் இதய ஸ்தானமான ராம நாம மந்திரம் கிடைத்து விட்டதே என தானே வைத்துக் கொள்ளாது அந்த கருணாமூர்த்தி காசித் தலத்தில் வந்து அமர்ந்தார்.

கங்கா நதி தீரத்தில் அமர்ந்து ராம நாமத்தை பூஜித்தபடி கிடந்தார். காசியில் வந்து மரிப்போரின் செவியில் தாமே சென்று ராம எனும் அந்த தாரக மந்திரத்தை ஓதி பிறவாமை எனும் முக்தி பதத்தை அடையச் செய்தார்.

நமது தென்னாட்டிலும் கூட தட்சிண காசி, விருத்த காசி எனும் புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. அதை விருத்தாசலம் என்று அழைப்பார்கள். இத்தலத்தில் மரிப்பவர்களின் ஆவி பிரியும்போது விருத்தாம்பிகை அவர்களை தம் மடியில் கிடத்தி புடவைத் தலைப்பினால் விசிறி மரணவலி இல்லாமல் செய்ய, விருத்தகிரீஸ்வரர் அவர்களின் காதில் ராம எனும ;மந்திரத்தை ஓதி மோட்சத்தை கிடைக்கச் செய்கிறார்.

Sivaperuman
Sivaperuman

ஒவ்வொரு யுகத்திலும் இறைவனை அடைய ஒவ்வொரு மார்க்கங்கள் இருந்தன. யாகத்தினால் ஒரு யுகத்திலும், கடுமையான தவத்தினால் வேறொரு யுகத்திலும், இயம, நியம, ஆசனம் மற்றும் அர்ச்சனையால் ஒரு யுகத்திலும் இறைவனை அடையலாம் என்று வகுத்து வைத்திருந்தார்கள். ஆனால், கலியுகத்தில் மட்டும் எந்தவொரு கடுமையான சாதனைகளும் செய்ய முடியாத சூழல் இருக்கும் என்பதையும் அன்றே அறிந்து வைத்திருந்தனர்.

அதனாலேயே மிக எளிய மார்க்கமான யாவரும் பின்பற்றும்படியான ஒரு மார்க்கத்தை பாகவதம் முதலான புராணங்களும், நாரதர், ஆஞ்சநேயசுவாமி, வியாசர் என்று மகரிஷிகள் உபதேசித்தனர்.

அந்த அற்புதமான மார்க்கமே நாம சங்கீர்த்தனம். நாம ஸ்மரணம் எனும் நாமத்தை மட்டும் ஜபித்தலாகும். அதற்காக கலியுகத்தில் ஆசாரமாகவும் ஒழுக்கமாகவும் இருக்கக் முடியாது என்று சொல்லவில்லை.

அப்படிப்பட்ட ஒழுக்கமான நியதிகளையும் இந்த நாம ஜபம் தானாகக் கொடுக்கும் என்பதே ரிஷிகளின் வாக்கு. எனவே இந்தகலியுகத்தில் ராம நாம மந்திரத்தினை ஜெபித்துக் கொண்டே இருப்போம். வைகுண்டமோட்சத்தை அடைவோம்.

மேலும் உங்களுக்காக...