‘கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்’ என சொல்வார்கள். ஒரு கல்யாணம் முடிப்பதையே பெரும்பாடாக நினைப்பர். எவ்வளவு கடன் வாங்கி செய்வார்கள் என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம். அதுபோல் தான் வீடு கட்டுவதும். அதனால்தான் ‘கல்யாணம் பண்ணிப்பார். வீட்டைக் கட்டிப்பார்’னு சொன்னாங்க நம்ம பெரியவங்க. அது சரி.
சிலர் 60ம் கல்யாணம் நடத்தும்போது இதெல்லாம் ஆடம்பரம்… பணக்காரர்கள்தான் செய்வாங்கன்னு நினைப்பாங்க. ஆனா அது தப்பு. 60ம் கல்யாணம் யார் வேணும்னாலும் நடத்தலாம். அதை எளிய முறையிலும் நடத்தலாம். ஆனால் 60ம் கல்யாணம் நடத்த வேண்டியது அவசியமா? அதன் நோக்கம் என்ன? அதனால் என்ன பலன் என்று பார்க்கலாமா…
நாம் பிறந்த வருடம், மாதம், நட்சத்திரம் மூன்றையும் சேர்த்துப் பார்ப்பது அறுபதாவது பிறந்த நாளில் தான். மறுமுறை பார்ப்பது 120 வயதில்! அந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. எனவே ஒரு மனிதனின் வாழ்வில் 60 வயது பூர்த்தி என்பது மிக விசேஷமான நாள். அன்றைய தினம் ஆயுள் ஹோமம் செய்து, திருமாங்கல்ய தாரணமும் செய்ய வேண்டும்.
அன்றைய தினம் முதல் மறுபிறவி எடுத்ததாக எண்ணி, அது முதல் அந்த தம்பதிகள் நோய் நொடிகள் இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழ்வார்கள். இதனை “ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி’ என சாஸ்திரங்கள் சொல்கின்றன. எனவே கட்டாயமாக செய்து தான் ஆக வேண்டும். ஆடம்பரமாகச் செய்ய வேண்டும் என்பதில்லை. எளிமையாக நடத்திக் கொள்ளலாம்.
ஒரே வீட்டில் இரு திருமணங்களைச் சேர்த்து நடத்தலாமா? நடத்தலாம், முகூர்த்த நேரத்தை மட்டும் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். கண் திருஷ்டிக்குப் பயந்துதான் சிலர் இதை செய்ய யோசிக்கிறார்கள். தேங்காய் உடைத்து பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்து விடுங்கள். தம்பதிகள் அமோகமாக இருப்பார்கள்.