இந்தியாவை துண்டு துண்டாக பிரிப்பேன் என கடந்த மாதம் மிரட்டிய ஜெய்ஷ்-எ-முஹம்மது தீவிரவாதி மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மாதம், இந்தியாவை பிரிப்பேன் என ஜெய்ஷ்-எ-முஹம்மது தீவிரவாதி மௌலானா அப்துல் அஜீஸ் மிரட்டிய நிலையில், நேற்று அவர் பாகிஸ்தானில் உள்ள பஹாவல்பூர் என்ற நகரில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது மரணத்தை அந்த அமைப்பின் சமூக ஊடகக் கணக்குகள் உறுதி செய்துள்ளன. மேலும், இன்று அவரது இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளதாகவும் அறிவித்துள்ளன.
ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் அரசு இந்த தகவலை இதுவரை அதிகாரபூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அஜீஸ் மரணம் உறுதி செய்யப்பட்டதா, அல்லது ஆன்லைனில் பரவும் ஒரு வதந்தியா என்ற குழப்பம் உருவாகியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூரின் போது குறிவைக்கப்பட்ட நகரங்களில் ஒன்றுதான் பஹாவல்பூர். இங்கிருந்த பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் துல்லியமாக அடித்து நொறுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் அஜீஸ் “பால்கனிசேஷன்” என்று சொல்லப்படும் ஒரு நாட்டை துண்டு துண்டாக பிரிக்கும் செயல்முறை குறித்து இந்தியாவை விமர்சித்தார். அந்த விமர்சனம் செய்ததிலிருந்து சுமார் ஒரு மாதத்திலேயே அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.
அவரை யாராவது கொலை செய்தார்களா அல்லது உடல் நலக் கோளாறு காரணமாக மரணம் அடைந்தாரா என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், மொத்தத்தில் “இந்தியாவை மிரட்டியவர் இறந்தார்; ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் முடிக்கிறான்” என்ற வசனம் போன்று இது நடந்துள்ளதாக நெட்டிசன்கள் இந்த நிகழ்வை குறித்து பதிவிட்டு வருகின்றனர்.