இன்று ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே ஐபிஎல் இறுதி போட்டி நடைபெற்று வரும் நிலையில், சில மணி நேரங்களுக்கு முன்பு ஆர்சிபி அணி தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு ஜெய் ஷா காரிலிருந்து இறங்கி சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து, “மேட்ச் பிக்சிங் முடிந்துவிட்டதா?”, “யார் ஜெயிக்க வேண்டும் என்பதை ஜெய் ஷா முடிவு செய்துவிட்டாரா?” என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் திருவிழா கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஸ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சு தேர்வு செய்த நிலையில், தற்போது பெங்களூர் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 5 ஓவர்களில் 45 ரன்கள் எடுத்து, ஒரு விக்கெட்டை இழந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஆர்சிபி அணி தங்கி இருந்த ஹோட்டலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஐசிசி தலைவர் ஜெய் ஷா சென்றதாக வெளிவந்த புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பல்வேறு காமெடியான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். “ஐபிஎல் இறுதிப் போட்டியில் யார் ஜெயிக்க வேண்டும் என்பதை ஜெய் ஷா முடிவு செய்துவிட்டாரா?” போன்ற சந்தேகங்களையும் எழுப்பினர்.
ஆனால் அந்த ஹோட்டல் வட்டாரத்தில் விசாரித்த தகவலின் படி, ஜெய் ஷா அங்கு வேறு ஒரு நபரை சந்திப்பதற்காகவே சென்றார் என்றும், அவர் ஆர்சிபி அணி வீரர்களை சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.