மே 7-ம் தேதி, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகள் மீது “ஆபரேஷன் சிந்தூர்” என்ற திட்டத்தை இந்தியா நடத்தியது. ஆனால் பாகிஸ்தான், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இந்திய பொதுமக்கள் மற்றும் இராணுவத்தைக் குறிவைத்து அனுப்பி, தீவிரத் தாக்குதலுக்கு முயன்றது.
இந்த தாக்குதல் மிகுந்த தந்திர திறனுடன் செயல்படுத்தப்பட்டது. அதாவது உண்மையான போர் விமானங்களை போல தோற்றமளிக்கும் போலி விமானங்களை பாகிஸ்தான் எல்லைக்கு அனுப்பியது. இதை உண்மையான போர் விமானங்கள் என நினைத்து பாகிஸ்தான் தனது சீனாவிலிருந்து பெற்ற HQ-9 ஏர் டிபென்ஸ் ஏவுகணைகள் மூலம் அழிக்க முயற்சித்தது. இதன் மூலம் பாகிஸ்தான் தன் பாதுகாப்பு அமைப்புகளின் துல்லியமான இடத்தை காட்டியது. தன்னுடைய இடத்தை இந்திய எதிர்தாக்குதல் களின்போது நேரடியாக வெளிப்படுத்திக் கொண்டது. அந்த இடங்களை தான் பின்னாளில் இந்தியா குறி வைத்து தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானின் தாக்குதல் தளங்களை போலி விமானங்களை அனுப்பியதன் மூலம் தெரிந்து கொண்ட இந்தியா, பிரஹ்மோஸ், ஸ்கால்ப், ராம்பேஜ், கிரிஸ்டல் மேஸ் போன்ற 15-க்கும் மேற்பட்ட தொலைநீள ஏவுகணைகளை பாகிஸ்தான் விமான தளங்கள் மீது வீசியது. விமான ஓடுதளங்கள், விமான நிறுத்துமிடங்கள், தொலைதொடர்புக் கட்டமைப்புகள் அனைத்தும் சேதமடைந்தன.
சிந்த் பகுதியில் பாகிஸ்தானின் தொலைநீள ட்ரோன்கள் மற்றும் வானில் உள்ள முன்னறிவிப்பு விமானங்களும் தாக்கப்பட்டன. இது, பிரம்மோஸ் ஏவுகணைகளை ஒரு உண்மையான போரியல் சூழ்நிலையில் பயன்படுத்தப்பட்ட முதல் முறையாகும்.
பாகிஸ்தான் ஏமாந்ததை தாமதமாக புரிந்து கொண்டது. அதே நேரத்தில் இந்திய தாக்குதலின் துல்லியமும், வன்மமும், பாகிஸ்தானை உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் நிலைக்கு கொண்டு வந்தது. மே 10 அன்று, பாகிஸ்தானின் DGMO, இந்தியாவின் DGMO-வை அழைத்து சண்டையை நிறுத்த சொல்லி தொடர்பு கொண்டார். அதன்பிறகு தான் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
மொத்தத்தில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பலவகையான தந்திரங்கள் செயல்படுத்தப்பட்டன என்பதும், அவை ஒவ்வொன்றாக தற்போது வெளியாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.