காந்திநகரில் நடைபெற்ற நிகழ்வில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியபோது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியை பாராட்டினார்.
2014-ல் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, மோடி அவர்கள் உரியில், புல்வாமாவில், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். உலகமே இன்று இந்தியாவின் பதிலடியை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளது, குறிப்பாக பாகிஸ்தான் பயப்படுகிறது,” என்று அமித் ஷா கூறினார்.
“ஆபரேஷன் சிந்தூர் மூலம் ஜெய்ஷ்-இ-மொஹம்மது மற்றும் லஷ்கர்-ஈ-தொய்பா போன்ற அமைப்புகளின் தலைமையகங்கள் பாகிஸ்தானில் அழிக்கப்பட்டன. பயங்கரவாத பயிற்சி முகாம்கள் உட்பட 9 முக்கிய இடங்களை இந்தியா அழித்தது. எங்கள் ராணுவம், பாகிஸ்தானுக்குள் 100 கிமீ வரை சென்று பயங்கரவாத முகாம்களை அழித்தது,” என்றார்.
“இனி இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை என்றால், பதில் இரட்டிப்பாக இருக்கும், சியால்கோட் மற்றும் பிற முகாம்களில் மறைந்திருந்த பன்னாட்டு பயங்கரவாத திட்டக்காரர்களுக்கே இந்த தாக்குதல்கள் எச்சரிக்கையாக இருக்கட்டும். இனிமேல் இந்திய மக்களுக்கு எதிராக எந்த ஒரு பயங்கரவாத நடவடிக்கையும் நடந்தால், அதற்கான பதில் இரட்டிப்பாக வரும்,” என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
பாகிஸ்தான், இந்தியாவின் மேற்கு எல்லையை தாக்க முயன்ற போதும், மோடி தலைமையில் இந்தியாவின் ஏர் டிபென்ஸ் சிஸ்டம் எந்த ஒரு ஏவுகணையையும் ட்ரோனையும் இந்தியா வரை வரவிடவில்லை. 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை அழித்த பிறகும், பாகிஸ்தான் இன்னும் யோசித்து கொண்டிருந்தபோது, அவர்களின் 15 விமான தளங்களை இந்தியா தாக்கியது. ஆனால் பாகிஸ்தான் பொதுமக்களுக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படுத்தவில்லை,” என்று அமித் ஷா பேசினார்.