டெல்லியை ஆட்சி செய்த ஆம் ஆத்மி அரசு, பள்ளி வகுப்பறைகள் காட்டியதில் 2000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், முன்னாள் துணை முதல்வர் உள்பட சிலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான கட்சி ஆட்சி செய்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தேர்தலில் அந்தக் கட்சி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. மீண்டும் பல ஆண்டுகளுக்குப் பிறகு, பாரதிய ஜனதா ஆட்சி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது சில திடுக்கிடும் ஊழல்களைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, டெல்லியில் உள்ள ஸ்மார்ட் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவதற்காக 2000 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடம் கட்டும் விவகாரத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, முன்னால் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், சத்யேந்தர் ஜெயினுக்கு ஜூன் 6-ம் தேதியும், மணிஷ் சிசோடியாவுக்கு ஜூன் 9-ஆம் தேதியும் டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சமனில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது சம்மன் அனுப்பி விசாரணை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆட்சியில், டெல்லியில் 12,748 வகுப்பறைகள் மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்காக அதிக செலவு செய்யப்பட்டதாகவும், அமைச்சர்கள் மணிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் இதற்குப் பொறுப்பாக வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
கட்டுமானத் திட்டங்களில் பல ஊழல்கள் நடந்துள்ளதாகவும், செலவுகள் அதிகமாகக் காண்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் திட்டமிட்ட வேலைகள் நடக்கவில்லை என்றும், குறிப்பிட்ட காலத்திலும் பணிகள் முறையாகப் பணியாற்றப்படவில்லை என்றும் ஊழல் தடுப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளது.
அதுமட்டுமின்றி, கட்டிடத்தில் ஆலோசகர் மற்றும் வடிவமைப்பாளர்கள் முறையான நடைமுறைகளை பின்பற்றாமல், அதிக செலவாக கணக்கிட்டு வழங்கியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி முழுவதும் 12,748 வகுப்பறைகள் கட்டுவதற்காக, ஒரு சதுர அடிக்கு ரூ.8,800 என அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில், ஒரு சதுர அடிக்கு ரூ.1,500 மட்டுமே செலவாகும் என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு வகுப்பறையின் கட்டுமான செலவு சுமார் ரூ.25 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் ஐந்து லட்சத்திற்குள் மிகவும் சிறப்பாகக் கட்ட முடியும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய பாரதிய ஜனதா அரசு இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பேரில் ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்குகள் மிகவும் தீவிரமாகச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால், அவர் தேவன் என்றாலும் விடமாட்டேன்” என்ற எம்ஜிஆர் பாடல் வரிகளுக்கு ஏற்ப, தற்போது மோடி அரசும், டெல்லி மாநில அரசும் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.