கோப்பையை வென்றதில் எனக்கும் பெருமை உண்டு.. முன்னாள் ஆர்சிபி உரிமையாளர் விஜய் மல்லையா.!

  18 ஆண்டு காலம் கழித்து பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள நிலையில், முன்னாள் பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா, “இந்த கோப்பையை வென்றதில் எனக்கும் பங்கு உண்டு” என்று தனது…

vijay mallya

 

18 ஆண்டு காலம் கழித்து பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள நிலையில், முன்னாள் பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா, “இந்த கோப்பையை வென்றதில் எனக்கும் பங்கு உண்டு” என்று தனது சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், பஞ்சாப் அணியை பெங்களூர் அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில், இந்தியா முழுவதிலும் இருந்து பெங்களூர் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் சூழலில், முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையாவும் தனது சமூக வலைதளத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் கடன் வாங்கிய பிறகு இந்தியாவை விட்டு தப்பிச் சென்ற மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், பெங்களூர் அணியின் முழு பயணமும் சிறப்பாக இருந்ததாகவும், நல்ல அனுபவம் கொண்ட சமநிலை உள்ள அணி, தைரியமாக விளையாடும் வீரர்கள், சிறந்த பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவு குழுவினர், ரசிகர்களின் உற்சாக ஆதரவு எல்லாம் இணைந்து இந்த வெற்றியை பெற்றதாகவும், மல்லையா தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர், மற்றொரு பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “நான் பெங்களூர் அணியை முதன்முதலாக தொடங்கிய போது, ஐபிஎல் கோப்பை நிச்சயமாக நம் ஊரான பெங்களூருக்கு வர வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது. அப்போது இளம் வீரராக இருந்த ‘கிங்’ விராட் கோலியை தேர்வு செய்த பெருமை எனக்கே உரியது. அவர் 18 ஆண்டுகளாக பெங்களூர் அணிக்காக தொடர்ந்து விளையாடுவது உண்மையிலேயே பிரமிக்க வைக்கும் விஷயம்.

அதேபோல், ‘யூனிவர்ஸ் பாஸ்’ கிறிஸ் கெயிலும், ‘மிஸ்டர் 360’ ஏபி டிவில்லியர்ஸும் எனது தேர்வுகள்தான். அவர்கள் பெங்களூர் அணியின் வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தைப் பதித்தவர்கள்.”

“இறுதியாக, அந்தக் கனவு நனவாகி, IPL கோப்பை பெங்களூருக்கு வந்துவிட்டது. என் கனவைக் கொண்டுசென்று நனவாக்கிய அணியின் வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும், மற்றும் அற்புதமான ரசிகர்களுக்கும் எனது நன்றியும், வாழ்த்துக்களும். பெங்களூர் ரசிகர்கள் மிகச் சிறந்தவர்கள். அவர்கள் இந்த கோப்பைக்கு நிச்சயமாக தகுதியானவர்கள்!” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கிய போது, பெங்களூர் அணியின் முதலாவது உரிமையாளராக விஜய் மல்லையா இருந்ததும், பின்னர் அந்த உரிமையை யுனிடெட் ஸ்பிரிட் என்ற நிறுவனத்திற்கு விற்றுவிட்டதும் குறிப்பிடத்தக்கது.