குட்டை பாவாடை.. குறைவாக பேசுபவர்கள்.. ரெண்டுமே மோசமானது.. பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு..!

  மத்திய பிரதேசம் மாநில பாஜக அமைச்சர் ஒருவர், “குட்டை பாவாடை போன்ற குறைவான உடை அணியும் பெண்களும், குறைவாக பேசும் அரசியல்வாதிகளும் மோசமானவர்கள்,” என்று பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம்…

skirt

 

மத்திய பிரதேசம் மாநில பாஜக அமைச்சர் ஒருவர், “குட்டை பாவாடை போன்ற குறைவான உடை அணியும் பெண்களும், குறைவாக பேசும் அரசியல்வாதிகளும் மோசமானவர்கள்,” என்று பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் கெய்லாஷ் விஜய் வர்கியா என்பவர், “இந்திய பெண்கள், உடையில் மிகவும் அழகாக தங்களை அலங்கரித்துக் கொள்வதில் வல்லவர்கள். நமது கலாச்சாரத்தின் மீது மிகுந்த மதிப்பு, மரியாதையும் வைத்திருப்பார்கள். அவர்களை பார்க்கும்போது தேவதையை பார்ப்பது போல் இருக்கும். ஆனால் சில நாடுகளில் குறைவான உடை அணிந்த பெண்களை ஆடம்பரமானவர்கள் என்று கருதுகிறார்கள்,” என்று கூறினார்.

இதோடு அவர் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. ஆனால், அவர் தொடர்ந்து, “குறைவாக ஆடை அணியும் பெண்களும், குறைவாக பேசும் அரசியல்வாதிகளும் இருவருமே மிகவும் மோசமானவர்கள்,” என்று விமர்சித்தார். மேலும், “நான் பெண்களை தேவதையாகவே நினைக்கிறேன். அவர்கள் ஒழுங்கான உடைகளை அணிய வேண்டும். உடலை வெளிப்படுத்தும் ஆடைகளை பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அணிவதை நான் விரும்பவில்லை. அவர்களுடன் புகைப்படம் எடுக்கக்கூட விரும்ப மாட்டேன்.

சில பெண்கள் குட்டை பாவாடையுடன் வந்து என்னிடம் செல்பி எடுக்க வருவார்கள். நான் அவர்களிடம், ‘மகளே, நீ அடுத்த முறை ஒழுங்கான உடையில் வா. அப்போது தான் புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன்,’ என்று அறிவுரை கூறி அனுப்பிவிடுவேன்,” என்று தெரிவித்தார்.

அவரது பேச்சு பெண்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது குறித்து அமைச்சர் அறிவுரை கூற வேண்டிய அவசியம் இல்லை,” என்றும், “இன்றைய பெண்கள் அனைத்தும் அறிவுடையவர்கள்,” என்றும் மகளிர் இயக்கங்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றன.

ஏற்கனவே, கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது, “பெண்கள் மிக மோசமாக உடைகள் அணிகிறார்கள். தேவதை போல் நாங்கள் பெண்களை நினைக்கிறோம். ஆனால், சூர்ப்பனகை போல் இருக்கிறார்கள். கடவுள் உங்களுக்கு அழகான உடலை கொடுத்துள்ளார். அந்த உடலை மறைக்க நல்ல, அழகான உடைகளை அணியுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் அதை சொல்லிக் கொடுங்கள்,” என்று கூறி பெரும் சர்ச்சைக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.