முன்பெல்லாம் வருடக் கணக்கில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சர்வ சாதாரணமாக இருந்தார்கள் என்பதும், குறைந்தது 10 வருடம் முதல் 20, 25 வருடங்கள் வரை ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் அதிகமாக இருந்தனர். ஆனால் தற்போது, ஒரு சின்ன காரணத்திற்காக கூட ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்திற்கு ஊழியர்கள் இடம் மாறி வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு சிறிய தொகை சம்பளம் அதிகமாக கிடைத்தால்கூட, உடனே நிறுவனத்தை மாற்றி விடுகிறார்கள் என்றும், இதனால் பல நிறுவனங்கள் திடீரென ஊழியர்கள் வெளியே போவதால் சிக்கல்களை சந்திப்பதாகவும் Go Zero என்ற நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இவர் தனது லிங்க்ட்இன் பக்கத்தில், “நான் எனது ஊழியர்களை தோழமையுடன் தான் நடத்தி வருகிறேன். என்ன பிரச்சனை இருந்தாலும் என்னிடம் நேரில் கூறலாம், அதற்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்றுதான் கூறி வருகிறேன். ஆனால், ஒன்றாம் தேதி சம்பளம் வழங்கினால், இரண்டாம் தேதியே சிலர் சொல்லாமல், கொள்ளாமல் வேலையை விட்டு நின்று விடுகிறார்கள்,” என்றும் அதனால் பல பாதிப்புகள் ஏற்படுகிறது என்றும் தெரிவித்தார்.
முந்தைய ஆண்டுகளில் பத்தாம் தேதி சம்பளம் வழங்கி வந்ததாகவும், அதை ஒன்றாம் தேதிக்கு மாற்றியதாகவும், அந்த மாற்றத்திற்கு பிறகு இரண்டாம் தேதியே வேலைக்கு வராமல் விலகி விடுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
“இப்படிப்பட்ட நடத்தைகள் சிலரிடம் இருப்பதால், ஊழியர்கள் மீது நம்பிக்கை தன்மை குறைகிறது. சரியான நேரத்தில் சம்பளம் கொடுப்பதை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். சம்பளம் வாங்கியவுடன் அடுத்த நாளே வேலைக்கு வராமல், சொல்லாமல், கொள்ளாமல் வேலையிலிருந்து நின்று கொள்வது முறையானது அல்ல.
வேலை, சம்பளம், மேலாளர், நிறுவனம் குறித்து ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதை மேலாளர் அல்லது என்னிடம் தாராளமாக கூறலாம். அப்படியே விலக வேண்டிய நிலை ஏற்பட்டாலும், முறையாக சொல்லிவிட்டு விலகிக் கொள்ளலாம். உறவுகளை முறிக்க வேண்டாம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்தப் பதிவுக்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கருத்துக்கள் தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கின்றன.