பாகிஸ்தானுக்கு உளவாளியாக வேலை செய்த இந்தியர் ஒருவர், இந்திய மொபைல் எண்களுக்கு வந்த OTPஐ ஹேக் செய்து பாகிஸ்தானின் ISI அமைப்பிற்கு வழங்கியதாகவும் பல எண்கள் ISI கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பகல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானின் உளவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஜோதி உள்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் கைதானவர் ஹசிம். இவரும் இவரது சகோதரர் காசிம் என்பவரும் சேர்ந்து பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாகவும் அதற்காக பணம் பெற்றுக் கொண்டதாகவும் காவல்துறை விசாரணையில் மூலம் தெரிய வந்தது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின் படி உளவாளி ஹசிம் இந்திய தொலைபேசி எண்களுக்கு வந்த OTPஐ ஹேக் செய்து பாகிஸ்தானின் ISI அமைப்பிற்கு வழங்கி உள்ளதாகவும் இதன் காரணமாக பல இந்திய தொலைபேசி எண்கள் பாகிஸ்தானின் ISI கட்டுப்பாட்டில் இருந்து அங்கிருந்து இயக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு வழங்கப்பட்ட எண்கள் வாட்ஸ் அப் மற்றும் சமூக ஊடகங்களை இயக்க பயன்படுத்தப்பட்டதாகவும் அதில் பாகிஸ்தானை பற்றி பெருமையாகவும் இந்தியாவைப் பற்றி மோசமாகவும் பதிவு செய்ய பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஹசிம், காசிம் ஆகிய இருவரும் காவல்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு உட்பட்டு உள்ளனர் என்றும் இன்னும் இவர்களிடமிருந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.