ஒரு பெண் ஆக்கபூர்வமாக செயல்பட்டால், வீட்டுக்கும் நாட்டுக்கும் மிகப்பெரிய நன்மை கிடைக்கும். ஆனால் அதே பெண் அழிவு பாதையில் சென்றால், மிகப்பெரிய சேதாரம் ஏற்படும் என்பதைத்தான் ஆவதும் பெண்ணாலே அழிவதும், பெண்ணாலே என முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.
அந்த வகையில், இந்தியாவில் உள்ள பெரும்பாலான உளவாளிகள் பெண்ணாசை காரணமாகத்தான் மாறியுள்ளனர் என்பது, விசாரணையில் திடுக்கிடும் தகவலாக வெளியாகியுள்ளது.
பகல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு உளவு சொல்லுபவர்கள் யார் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கான விசாரணையில், இந்திய அதிகாரிகள் களமிறங்கிய நிலையில், சுமார் 1500 பேர் கொண்ட சந்தேகப்பட்டியல் தயார் செய்யப்பட்டது. இவர்கள் அரசு ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், யூடியூபர்கள், பிளாக்கர்கள், சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் இருப்பவர்கள், மாணவர்கள் உள்பட பலரும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தனித்தனி நபருக்கும் தனியாக அறிக்கையை தயாரிக்க உத்தரவிட்ட நிலையில், இந்த 1500 பேர்களில் 30 பேர் தற்போது உளவாளியாக மாறியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் சில அமைப்புகள், இந்த உளவாளிகளின் பொருளாதார மற்றும் உணர்ச்சி பலவீனங்களை பயன்படுத்தியுள்ளன என்பதும், குறிப்பாக பெண்களை வைத்து மயக்கியுள்ளதாகவும் தெரிய வருகிறது. இந்திய பெண்கள் பெயரில் போலியான சமூக வலைதள கணக்குகள் ஆரம்பித்து, காதல் தூது விடுவது, காதலில் மயங்கிய பின்னர் அவர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தகவல்களை சேகரிப்பது ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர்.
உளவாளியாக மாறியவர்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தனர் என்றும், ஒரு சிலர் பாகிஸ்தானுக்கும் சென்று வந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவின் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள்தான் உளவாளியாக மாறியுள்ளனர் என்றும், வட மாநிலங்களில் தான் ராணுவ அமைப்புகள், ராணுவ தளவாடங்கள் அதிகமாக இருப்பதால், அங்கிருந்துதான் ஐஎஸ்ஐ தனது பணியை தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
யூடியூபர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், பொறியாளர்கள் உள்பட பல்வேறு தொழில்களில் ஈடுபடுபவர்கள், பணத்திற்காகவும், பெண்ணுக்காகவும் உளவாளியாக மாறியுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப், டெலிகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் உளவு தகவல்கள் பரிமாறப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஏராளமானோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.